
திடீர் குருசடியை அப்புறப் படுத்த இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தியதை அடுத்து அது அகற்றப் பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஒன்றியம் மலையடி பஞ்சாயத்தில் திடீரென குருசடி அமைக்கப் பட்டது. கிறிஸ்துவர்கள் கல்லறைத் தோட்டத்துக்கு செல்லும் வழியில், பிரதான சாலையில் இருந்து செல்லும் பாதையில் சாலை இடத்தில் கட்டுமானம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இது குறித்து போலீஸாருக்கும் வருவாய்த் துறையினருக்கும் எச்சரிக்கை செய்து, இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தினர். அப்போது, இது காவலாளி தங்குவதற்கான அறை என்றும், அங்கே எந்த வழிபாட்டு தலமும் வராது என்றும் கிறிஸ்துவர்கள் தரப்பில் கூறப்பட்டதை அடுத்து, அதனை ஏற்று இந்து முன்னணியினர் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.

இந்நிலையில் இன்று காலை திடீரென அந்த இடத்தில் அந்தோணியார் சிலை, மேரி சிலை, சிலுவை என அனைத்தும் வைக்கப் பட்டு, திடீர் குருசடி முளைத்தது. அந்தப் பகுதிக்கு நேர் எதிரில் இந்துக்கள் வசித்து வருகின்றனர். இதனால், அந்த திடீர் குருசடியை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரி இந்து முன்னணி மீண்டும் போராட்டம் நடத்தியது.
குருசடி அமைத்து சட்டத்துக்குப் புறம்பாக வைக்கப் பட்ட சிலைகளை அப்புறப்படுத்தக் கோரி, இந்து முன்னணி மாவட்ட தலைவர் மிசா சோமன் தலைமையில் இந்துக்கள் வசிக்கும் பகுதியில் வெட்ட வெளியில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்யப் பட்டது. இதை அடுத்து அங்கு விரைந்து வந்த வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதை அடுத்து குருசடியில் உள்ள சிலைகளை அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுக்கப் பட்டது. பின்னர் அந்த சிலைகள் வாகனத்தில் ஏற்றப்பட்டு விளவாங்கோடு வட்டாட்சியர் அலுவலகம் கொண்டு செல்லபட்டது.
முன்னதாக இந்து முன்னணியினருடன் விளவாங்கோடு வட்டாட்சியர் புலன்தார தாஸ், களியாக்காவிளை இன்ஸ்பெக்டர் சுமதி பளுகல், கிராம நிர்வாக அதிகாரி சங்கர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். மேல்புறம் ஓன்றிய செயலாளர் ராஜன் உள்பட இந்து முன்னணியினர் பலர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு, திடீர் குருசடியை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், இந்த கட்டடம் இப்படியே இருந்தால், மீண்டும் இது போல் சிலைகளை வைத்து குருசடி அமைப்பர் என்பதால், அந்தக் கட்டடத்தை அகற்ற வேண்டும் என்று இந்து முன்னணியினர் கோரிக்கை வைத்தனர்.

முறையான அனுமதி பெற்று அவர்கள் இடத்துக்குள் வேண்டுமானால் அமைத்துக் கொள்ளலாம், ஆனால் இவ்வாறு முறைகேடாக செயல்படுவது தவறு என்று பலரும் கூறினர். இதை அடுத்து, அந்தக் கட்டடத்தை அப்புறப்படுத்துவது குறித்து புதிய மனு அளிக்குமாறு கூறப் பட்டதை அடுத்து, இந்துமுன்னணியினர் அதை ஏற்று கலைந்து சென்றனர்.