8 வழிச்சாலையை ரத்து செய்ய முதல்வர் ஒப்புதல்: பா.ம.க.வுக்கு அடுத்த வெற்றி!

Published:

anbumani - 2026

சென்னை – சேலம் இடையிலான 8 வழி பசுமைச்சாலைத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழக அரசு செயல்படுத்தும்; அது தமிழக அரசின் கடமை என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார். உழவர்களின் நலன்களை காக்கும் வகையிலான முதலமைச்சரின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது மட்டுமின்றி பாராட்டத்தக்கதும் ஆகும்… என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கையில்…

தி இந்து ஆங்கில நாளிதழுக்கு நேர்காணல் அளித்த அவரிடம் சென்னை- சேலம் இடையிலான பசுமைச் சாலைத் திட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறதே என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,‘‘ 8 வழிச்சாலை அமையவுள்ள பகுதி தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதி ஆகும்.

புதிய சாலை அமைப்பதன் மூலம் அப்பகுதியில் தொழிற்துறையும், உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படும். அதனால் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் நாங்கள் நம்பினோம். ஆனால், அந்தத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், நீதிமன்றத்தின் ஆணையை செயல்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமை’’ என்று கூறியுள்ளார்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

எட்டு வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப் படுவதால் பாதிக்கப்படும் விவசாயிகளின் உணர்வுகளை மதித்து இத்தகைய நிலைப்பாட்டை முதலமைச்சர் மேற்கொண்டுள்ளார்.

சென்னை- சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே அத்திட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது. இத்திட்டத்தால் பாதிக்கப்படக்கூடிய 5 மாவட்ட மக்களை விவசாயிகளை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தேன். அவர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கைத் தொடர்ந்தேன். அந்த வழக்கில் தான் 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு முழுமையானத் தடை விதிப்பதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து மத்திய, மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால், அந்த வழக்கில் எனது தரப்பு வாதத்தைக் கேட்காமல் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்று கோரி கேவியட் மனுவையும் உச்சநீதிமன்றத்தில் எனது சார்பில் எனது வழக்கறிஞர்கள் தாக்கல் செய்திருக்கின்றனர்.

இத்தகைய சூழலில் தான் முதலமைச்சர் பழனிச்சாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த விஷயத்தில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இது இரண்டாவது வெற்றி ஆகும். இதற்காக முதலமைச்சர் பழனிச்சாமிக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நான் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

சென்னை & சேலம் இடையிலான 8 வழிச்சாலை விவகாரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை என்பது தான் உண்மை. இதுதொடர்பாக 11.06.2018 அன்று தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய ஸ்டாலின், ‘‘8 வழிச்சாலை போடுவது தவறு என்று கூறவில்லை. கருத்து கேட்பு கூட்டம் நடத்தி, மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து பணியை துவக்க வேண்டும் என்றே வலியுறுத்துகிறோம்’’ என்று கூறினார்.

அதேநாளில் சட்டப்பேரவைக்கு வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்,‘‘ பசுமை வழிச் சாலை போன்ற திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்குத் தேவை. அதை திராவிட முன்னேற்றக் கழகம் முழு மனதுடன் வரவேற்கிறது’’ என்று கூறினார்.

இதை விட மோசமான துரோகத்தை உழவர்களுக்கு செய்ய முடியாது. இத்தகைய துரோகத்தைச் செய்த மு.க.ஸ்டாலினுக்கு இச்சிக்கல் குறித்து பேச ஸ்டாலினுக்கு தகுதியில்லை. அதுமட்டுமின்றி இதற்காக உழவர்களிடம் அவர் மன்னிப்பு கோர வேண்டும்… என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார் அன்புமணி.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

Related articles

Recent articles

spot_img