கோடை விடுமுறையில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு குறுகிய கால கணினிப் பயிற்சி அளிக்க அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் இயங்கும் ராமானுஜன் கணினி மையம் ஏப்ரல், மே மாத கோடை விடுமுறை காலத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு “சி” புரோகிராமிங் கணினிப் பயிற்சியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. வழக்கம்போல் இந்த ஆண்டும் கணினி பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.
இப்பயிற்சி ஒரு வார காலம் நடைபெறும். ஏப்ரல் 15, 22, 29, மே 7, 14 என 5 கட்டங்களாக பயிற்சி நடத்தப்படும். (இந்த தேதிகளில் பயிற்சி தொடங்கும்) தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அண்ணா பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் நடைபெறும். சேர்க்கை கட்டணம் ரூ.1,000. இதை “Co-ordinator, C Programming” என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க டிமாண்ட் டிராப்டாக செலுத்த வேண்டும். சேர்க்கைக்கான மாதிரி விண்ணப்பம் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.annauniv.edu) வெளியிடப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழகத்தில் இயங்கும் (கேண்டீன் அருகில்) ராமானுஜன் கணினி மையத்துக்கு மாணவர்கள் நேரில் வந்து பதிவு செய்துகொள்ளலாம். பயிற்சி முடிவில் தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்று பயிற்சி ஒருங்கிணைப்பாளர் அறிவித்துள்ளார்.