
தமிழகத்தின் இரண்டாம் தலைநகரம் என்று முன்னர் அதிகம் பேசப்பட்ட, தமிழகத்தின் நடுநாயகமாக இருக்கின்ற, தென் தமிழகத்தையும் வட தமிழகத்தையும் கொங்கு மண்டலத்தையும் போக்குவரத்து ரீதியாக இணைக்கும் மையப் புள்ளி நகரம் திருச்சிராப்பள்ளி. இந்த நகருக்கு கல்வித் துறையில் தனியிடம் உண்டு.
இங்குள்ள கல்லூரிகளில் ஒவ்வொன்றுக்கும் ஒரு பட்டப் பெயர் சூட்டி அழைத்துக் கொள்கிறார்கள் மாணவர்கள், ஜெயில், ஜாலி, நாஸ்டி என்றெல்லாம் சில கல்லூரிகளுக்கு பட்டப் பெயரிட்டு அழைக்கும் போது, ‘பியூட்டி பிஷப்’ என்று திருச்சி புத்தூர் வயலூர் சாலையில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரிக்கு பெயரிட்டு அழைக்கிறார்கள்.
திருச்சி தஞ்சாவூர் சிஎஸ்ஐ – டயோசீஸின் கீழ் வரும் தன்னாட்சி பெற்ற கல்லூரியான இக்கல்லூரி, திருச்சி பாரதிதாசன் பல்கலையின் கீழ் வருகிறது. சிறந்த கட்டமைப்பு, அழகான கட்டடங்கள், செயற்கையாக உயிரூட்டப்பட்ட இயற்கை வண்ணக் கலவையுடன் தோட்டங்கள், பூங்காக்களுடன் பியூட்டியாகவே திகழும் இந்தக் கல்லூரி, இப்போது மாணவிகளுக்கு பாலியல் சீண்டல்கள் கொடுத்த விவகாரத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறது.
திருச்சியின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் பிஷப் ஹீபர் தன்னாட்சி கல்லூரியில் பாலியல் சீண்டல் புகார்.…
திருச்சியின் அடையாளங்கள் மட்டுமின்றி பல்வேறு ஆட்சியர்கள், அதிபர்கள், நீதிபதிகள் என அரசின் முக்கிய பொறுப்புகளில் அங்கம் வகிப்பவர்களை உருவாக்கிய பிஷப் ஹீபர் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் மீது அத்துறையில் பயின்ற மாணவிகள் 5 பேர் பாலியல் புகார் கொடுத்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.

புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரியின் தமிழ்த்துறையில் பட்ட மேற்படிப்பு படித்து வந்த மாணவிகள் 5 பக்க அளவிலான புகார் மனுவை கல்லூரியின் முதல்வருக்கு அனுப்பியிருக்கின்றனர். அதில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது…
பேராசிரியர் வகுப்பறையில் எங்களுக்கு மிக நெருக்கமாக வந்து அமர்ந்து கொண்டு காலை காலால் சுரண்டுவது, இரட்டை அர்த்தம் வரும்படி கொச்சையாகப் பேசுவது என பல்வேறு பாலியல் சீண்டல்கள் ஈடுபட்டார்’ என்றும், உச்சகட்டமாக `சட்டையை பேண்ட்டை தளர்த்திக்கொண்டு அவர் செய்த சேட்டைகளை பார்த்து தலையை குனிந்துகொண்டே நாங்கள் வகுப்பறையில் இருந்தோம்’ என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும், தமிழ்த்துறை பேராசிரியர் மாணவிகளைப் பார்த்து அவ்வப்போது, உங்கள் ஆண் நண்பருடன் அல்லது கணவருடன் இருசக்கர வாகனத்தில் போனால் என்ன மாதிரியான உணர்வு வரும்? பூங்காவில் காதலர்கள் அமர்ந்திருப்பதைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றும் என்றெல்லாம் கேட்டு இம்சை செய்தார் என்றும், அவர் வகுப்பறையில் குறைந்தளவு மாணவிகள் என்றால் தன் அறைக்கு வரச்சொல்லி கட்டாயப் படுத்துவதும், அதே துறையில் உதவி பேராசிரியராக பணிபுரியும் பெண் ஒருவர் மாணவிகளைப் பார்த்து `எச்ஓடியை பார்க்க போகும் நேரத்தில் முகம் கழுவி மேக்கப் போட்டுக் கொண்டு தான் போக வேண்டும்’ என வலியுறுத்தியதாகவும், இதனால் இந்தக் கல்லூரியிலிருந்து வெளியேற விரும்புவதாகவும் புகார் கொடுத்திருக்கின்றனர்.

இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கறிஞர் ஜெயந்திராணி தலைமையிலான கல்லூரியின் துணை முதல்வர் அழகப்ப மோசஸ், கம்ப்யூட்டர் துறைத் தலைவர் சத்தியசீலன், பேராசிரியை வயலட் ஆகியோர் அடங்கிய குழு புகார் கொடுக்கப்பட்ட தமிழ்த்துறை தலைவர் பால் சந்திரமோகன், உதவி பேராசிரியர் நளினி உள்ளிட்டோரிடம் விசாரணை செய்து அதன் அறிக்கையையும் கல்லூரி முதல்வரிடம் தாக்கல் செய்திருக்கிறது. இந்த நிலையில் தற்போது மாணவிகளின் புகார் குறித்து காவல்துறை வட்டாரமும் விசாரிக்கத் துவங்கி இருக்கின்றது.

தமிழகத்தின் முக்கியமான கிறிஸ்துவக் கல்லூரி மட்டுமல்லாது பல்வேறு அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும், தொழிலதிபர்களையும் உருவாக்கிய பிஷப் ஹீபர் கல்லூரியில் பாலியல் சீண்டல் தொடர்பான பிரச்சனை எழுந்திருப்பது திருச்சியில் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கின்றது.

தமிழ்த்துறை மாணவிகள் கொடுத்திருக்கும் புகாருக்கு ஆளான அத்துறையின் தலைவர் மீது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே பல்வேறு பாலியல் புகார்கள் எழுந்த நிலையில் சில மாதங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு பின்னர் மீண்டும் பணிக்கு சேர்க்கப்பட்டுள்ளார் என்கிறார்கள்…
இந்தத் துறையின் முன்னாள் மாணவர் ஒருவர் குறிப்பிடும் போது, அவரை நாங்கள் நடன சுந்தரி என்றுதான் குறிப்பிடுவோம் என்றார். ஏற்கெனவே அவரால் இது போன்ற பிரச்னைகள் வந்தும், புகார்கள் கொடுக்கப்பட்டும் பெரிய அளவிலான நடவடிக்கைகள் இல்லை என்பதால், மாணவர்கள் புகார் கொடுப்பதில் அலுத்துப் போய்விட்டார்கள். இவர்களுக்கு ஒரு வசதி உண்டு. பள்ளிகளாக இருந்தால் ஆறாம் வகுப்பில் இருந்து எப்படியும் ஏழு வருடங்கள் தொடர்ந்து பள்ளியில் படிக்க வேண்டியிருக்கும். கல்லூரியில் இரண்டு அல்லது மூன்று வருடம்தான். அதை முடித்துவிட்டு, அவரவர் தங்கள் வாழ்க்கையைப் பார்த்துக் கொண்டு போய்விடுவார்கள். எனவே இது போல் பாலியல் புகார்களை தாங்கள் பாதிக்கப் பட்ட போதும் பெரிதாக கொண்டு சென்று தீர்வுக்காக நாட மாட்டார்கள். சிலர் திருமண நிலையில் இருக்கும் போது ஏன் தேவையற்ற பிரச்னை என்று சகித்துக் கொண்டு போய் விடுவார்கள்… அதை எல்லாம் மீறி இது போல் எப்போதாவது புகார்கள் வந்தாலும், நடவடிக்கையும் பெரிதாக இருக்காது, ஊடக வெளிச்சமும் இந்த விவகாரங்களுக்கு படாது! காரணம் கிறிஸ்துவக் கல்லூரி… என்று பொரிந்து தள்ளினார்.
சமூக ஊடகங்களிலும் இந்த விவகாரம் பெரிதும் எதிரொலித்து வருகிறது.
இந்த விவகாரம் குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர் நம்மிடம் தெரிவித்த போது… முன்னர் சுவாமிராஜ் என்பவர் கல்லூரி முதல்வராக இருந்த போது, ஒவ்வொரு துறையிலும் கிறிஸ்துவ – கிறிஸ்துவரல்லாத பேராசிரியர்கள் பணி நியமனத்தில் ஓரளவு சம வாய்ப்பு இருந்தது. அண்மைக் காலங்களில் நிலைமை மிக மோசமாகி கிறிஸ்துவர்கள், சாதி ரீதியான சிபாரிசுகள் மட்டுமே செல்லுபடி ஆனதால், இப்போது கல்வித் தரத்திலும் கல்லூரி தள்ளாடிக் கொண்டிருக்கிறது. .. சர்ச் ரீதியாக நிர்வாகத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஓட்டு இருப்பதால், தங்கள் குடும்பத்தில் ஒருவரை உள்ளே நுழைத்து விடுவது என்று செயல்படுகிறார்கள். இதனால் தகுதி தராதரம் இல்லாதவர்கள் எல்லாம் கல்வித் தளத்தில் வந்துவிடுகிறார்கள். திறமை இருந்தும் கிறிஸ்துவரல்லாத பேராசிரியர்களால் துறைத் தலைவராகவோ, பதவி உயர்வு பெற்று முன்னேறுவதோ இயலாததாகி விட்டது… அதனால் ஒழுக்கம், கட்டுப்பாடு எதுவும் முக்கியமான அம்சமாக இல்லாமல் போய்விட்டது” என்று வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டார்.
இந்த விவகாரம் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் தகவல் பகிர்ந்துள்ள இவ்வூரைச் சேர்ந்த புகழ் மச்சேந்திரன் என்பவர், சில கேள்விகளையும் எழுப்பியுள்ளார். அவரது பதிவில்…
பூங்காவில் காதலர்கள் இருவரை பார்த்தால் என்ன தோன்றும்..?
நிச்சயம் ஆகி மூன்று மாத இடைவெளியில் என்ன தோன்றும்.?
திருமணம் முடிந்து கணவன் மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது அந்த இடத்தில் உன்னை வைத்து பார்ப்பாயா?
இதெல்லாம் மாணவிகளிடம் கேட்டது வேறு யாருமல்ல..
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் தமிழ் துறை தலைவர் பால் சந்திர மோகன்..
இவர் ஏற்கனவே ஹாஸ்டல் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டு 1997 ஆம் ஆண்டு இதே கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் ஆனவர்..
அதன் பிறகும் அடங்கவில்லை..உதவி பேராசிரியை நளினியை பற்றி பக்கம் பக்கமாக கவிதை எழுதி மறுபடியும் சஸ்பெண்ட் ஆனவர்..
2015ம் ஆண்டு ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியாகி அது பிஷப் கவனத்துக்கு கொண்டு போகபட்டு அப்போதே துறைதலைவராகும் வாய்ப்பை இழந்தவர்..
உதவி பேராசிரியை நளினி சாதரணமானவள் அல்ல..துறை தலைவரை பார்கக இப்படியா போவீங்க நல்லா மேக்கப் போட்டு போங்க என அறிவுரை தந்து கூட்டி விட்டவர்..
தொடர்ந்து மாணவிகளிடம் பாலியல் புகாருக்கு உள்ளான ஒருவரை கல்லூரி நிர்வாகம் பணியில் அமர்த்தி உள்ளது..அதிகபட்ச நடவடிக்கை சஸ்பெண்ட் மட்டுமே..
பள்ளியை அரசுடமை ஆக்க வேண்டும் என்பவர்கள் இந்த கல்லூரியை அரசு கையகபடுத்த வேண்டும் என கேட்பார்களா..?
ஆசிரியர் தவறுக்கு நிர்வாகத்தை குற்றம் சொன்னவர்கள் அதே அளவுகோளை இங்கும் வைப்பார்களா..?
பத்மா சேஷாத்திரி பள்ளிக்கு பொங்கி எழுந்த ஊடகங்கள் மற்றும் அனைவரும் இதற்கும் எழுவார்களா அல்லது வழக்கம் போல சிறுபான்மை பாசத்தால் அமைதி காப்பார்களா..? – என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியாகி, விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.