உயர் நீதிமன்றத்தில் கோயில் பற்றிய கருத்துக்கு இந்து முன்னணி வருத்தம்!

Published:

hindu munnani - 2026

நிர்வகிக்க முடியாவிட்டால் மூடுவற்கு கோவில்கள் என்ன அரசாங்க பெட்டி கடையா ? என்று கூறியுள்ள இந்து முன்னணி அமைப்பு,  உயர் நீதிமன்றத்தின் கோயில் குறித்த கருத்துக்கு தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து, இந்து முன்னணி மாநிலத் துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் வெளியிட்ட அறிக்கையில்,

கோயில் விக்ரகங்கள் கடத்தல் குறித்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதியரசர் மகாதேவன் மற்றும் நீதியரசர் ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது

அப்போது நீதியரசர்கள் சுவாமி விக்ரகங்களைப் பாதுகாக்க முடியவில்லை என்றால் கோவில்களை அரசு மூடிவிடலாமே என கருத்து தெரிவித்ததாக நாளிதழில் இன்று செய்தி வெளியாகி உள்ளது!

நீதியரசர்களின் இந்தக் கருத்து மிகுந்த வருத்தத்திற்குரியது. கோயில் விக்ரகங்கள் கடத்தல் வழக்கு உயர் நீதிமன்ற கண்காணிப்பினால் தான் நேர்மையாகவும் தொடர்ச்சியாகவும் நடைபெறுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை மூலம் தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு வருமானம் கிடைக்கிறது! அப்படி இருக்கும் போது சுவாமி விக்ரகங்களைப் பாதுகாக்க முடியவில்லை என்றால் தமிழக அரசு கோவில்களை மூடி விடலாமே என கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

இந்துக் கோவில்களை தமிழக அரசு பராமரிக்க பாதுகாக்கத் தவறியதை நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது மிகச் சரியானது. அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் அதற்காக கோவில்களை மூடிவிடலாமே என்ற தொனியில் எழுப்பிய கேள்வி பாணியிலான கருத்து ஏற்புடையதல்ல.

ஏற்கெனவே தமிழக அரசு கட்டுப்பாட்டிலுள்ள பல கோவில்கள் பாழடைந்து சிதிலமடைந்து மூடப்பட்டுள்ளன. இந்துக் கோவில்கள் அனைத்தும் மன்னர்களாலும் மக்களாலும் கட்டப்பட்டுள்ளதே தவிர அரசாங்கத்தால் அல்ல. அதை மூடுவதற்கு அரசுக்கு எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது.

சொல்லப் போனால் கோவில்களை தமிழக அரசு ஆக்கிரமித்து தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. எனவே தமிழக அரசு ஆலயத்தை விட்டு வெளியேற வேண்டும். அதை இந்து ஆன்மீக குழுவினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறலாமே தவிர கோவில்களை மூடலாமே என்ற நீதியரசர்களின் கேள்வி மிகுந்த வருத்தத்திற்குரியது.

அரசின் இயலாமைக்காக இந்துக்களின் வழிபாட்டு உரிமையை பறிக்கலாமா? எதிர் காலத்தில் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் கோவில்களை இழுத்து மூடுவதற்கு நீதிமன்றமே வழிகாட்டுவது போல் ஆகிவிடுமே!

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

கோவில்களை மூடலாமே என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் கருத்துக்கு இந்துமுன்னணி சார்பில் வருத்தத்தைப் பதிவு செய்கிறோம் .. என்று கூறியுள்ளார்.

Related articles

Recent articles

spot_img