“ப்ரன்ஸிபள் அவ் ஸீப்ரே”-பெரியவாளின் சட்ட ஞானம்.
(“பெரியவா Bar-க்கு வராம இருந்தேளோ, நாங்களும்
பெரிய ‘லாயர்’கள்னு பேரெடுக்க முடிஞ்சுதோ!” )
(திருப்புகழ் மணி ஸ்ரீ டி.எம்.கிருஷ்ணஸ்வாமி ஐயர்)
கட்டுரை-ரா.கணபதி.
கருணைக் கடலில் சில அலைகள்-புத்தகம்.
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
.
சட்ட ஞானத்தில் அந்த ஸர்வக்ஞர் சொன்னதும் செய்ததும் எத்தனை எத்தனையோ ! அரசியல் சாசனப் பூர்வமாக ‘அடிபடை உரிமை’களில் மதச் சுதந்திரம் சேர்க்கப்பட்டதற்கு அந்த மஹான்தான் காரணம் என்பதை வெகு சிலரே அறிவர். அப்படி ஓசைப்படாமல் அரியன சாதிக்கும் அடக்கப் பெட்டகம் அவர்.
அவரது சட்ட ஞானத்தை வியந்த திருப்புகழ் மணி ஸ்ரீ டி.எம்.கிருஷ்ணஸ்வாமி ஐயர் அவரிடமே சொன்னாராம்.
“பெரியவா Bar-க்கு வராம இருந்தேளோ, நாங்களும் பெரிய ‘லாயர்’கள்னு பேரெடுக்க முடிஞ்சுதோ!” என்று.
ஏதோ ஓர் அறக்கட்டளையை கலைத்துவிட அதன் அறங்காவலர்கள் முடிவு செய்திருப்பதாகவும், அவர்கள் யாவரும் பெரியவாளின் பக்தர்களாகையால் அதன் சொத்துக்களை அவர் உயிரினும் பெரிதாக மதித்த வேதரக்ஷண நிதி ட்ரஸ்டுக்கு மாற்றி விட விரும்புவதாகவும் அவர்களில் ஒருவர் செய்தி கொண்டு வந்தார். அதற்கு ஸ்ரீ சரணருடைய அநுமதியும் அநுக்ரஹமும் வேண்டினார்.
ஸ்ரீ சரணர் பளிச்செனப் பதிலிறுத்தார்: “நீங்க ட்ரஸ்டீகளெல்லாரும் எங்கிட்ட பக்தியா இருக்கேன்னா போறுமா என்ன? ஒங்க பக்தியை, அபிமானத்தை மனஸார அங்கீகரிச்சுக்கறேன். ஆனாலும் ஒங்க ட்ரஸ்டோட ஆஸ்தி பாஸ்தியை வேதரக்ஷண நிதிக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்றதுன்னா, அதுக்குச் சட்டம் எடம் குடுத்தாதானே முடியும்?
அந்த மாதிரிக் குடுக்கலியே! “ப்ரன்ஸிபள் அவ் ஸீப்ரே”ன்னு ‘லா’வுல இருக்கு. அதன்படி, ஒரு டிரஸ்டைக் கலைக்கும்படி ஏற்பட்டா அதனோட சொத்துக்களை எந்த லக்ஷ்யத்துல அந்த ட்ரஸ்ட் ஆரம்பிச்சு நடத்துதோ, அதுக்கு ரொம்பக் கிட்டினதான ஒரு லக்ஷ்யத்தோட நடக்கற இ்ன்னொரு ட்ரஸ்டுக்குத்தான் மாத்த முடியும்.
ரொம்ப வித்யாஸமான லக்ஷ்யம் இருக்கிற ட்ரஸ்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ண முடியாது. இப்ப ஒங்க ட்ரஸ்டோட லக்ஷ்யமும் வேதரக்ஷணமும் வித்யாஸமானதுன்னுதான் எல்லாரும் அபிப்ராயப்படுவா.
ஒங்க ட்ரஸ்ட் ஸோஷல் ஸர்வீஸ் லக்ஷ்யத்துல ஏற்பட்டது. வேதரக்ஷணத்தைவிடப் பெரிய சோஷல் ஸர்வீஸ் இல்லேன்னு எங்க மாதிரி சில பேர் வேணா சொல்லலாமே தவிர, அதைப் பொதுவா லோகம், கவர்மென்ட், கோர்ட் ஒத்துக்காது. ஆனதுனால், ஒங்க ஆசையைப் பூர்த்தி பண்ண முடியலியேன்னு எனக்கும் கஷ்டமாத்தான் இருக்குன்னாலும் அப்படித்தான் சட்டம் கட்டுப்படுத்தறது.
நீங்க இத்தனை அபிமானமா நெனச்சதே வேதரக்ஷண ட்ரஸ்டுக்குப் பணத்தைக் கொண்டு வந்து கொட்டும்! ஒங்க பணமும் ஒரு நல்ல சோஷல் சர்வீஸ் ஆர்கனைஸேஷனுக்குப் போய்ச் சேந்து நல்லபடியா பிரயோஜனமாகணும்னு ப்ரார்த்திச்சுக்கறேன்”- அவருக்கே உரித்தான ஆழ்ந்த அநுதாபத்துடன் கூறி, அகம் குவித்துச் சிறிது நேரம் பிரார்த்திக்கிறார்.
அடுத்து அவரது மொழியியல் ஞானம், பன்மொழிப் புலமை ஆகியவற்றுக்கும் சான்று படைக்கிறார்.
” ‘ஸீப்ரே’-ன்னு சட்டப் பாயின்ட் சொன்னேனே, அதுக்கு ஸ்பெல்லிங்படிஉச்சரி்ப்புப் பாத்தா ‘ஸைப்ரஸ்’னு வரும். ஆனா அது ஃப்ரெஞ்ச் வார்த்தையானதால, அந்த பாஷையோட லக்ஷணப்படி ஸ்பெல்லிங் ஒரு தினுஸாவும், உச்சரிப்பு வேறே தினுஸாவும் இருக்கும். இந்த வார்த்தை ஸ்பெல்லிங்படி ‘ஸைப்ரஸ்’ன்னு ஆகும்.ஆனாலும் ஸைப்ரஸ் தீவுக்குப் போடற ஸ்பெல்லிங் இல்லை. அந்தத் தீவுக்கு,
C,Y,P,R,U,S-னு ஸ்பெல்லிங் போடறோம். ‘ஸீப்ரே’க்கு C,Y, அப்புறம் ரெண்டு வார்த்தையை ஒண்ணா சேக்கறப்ப ஸந்தியிலே போடறஹைஃபன், ஹைஃபனுக்கு அப்பறம் P,R,E..E, தான் U இல்லே:U போட்டா ஸைப்ரஸ் தீவுன்னு ஆயிடும்…E க்கு அப்புறம் கடைசி எழுத்தா S-(CY-PRES). அந்த ‘S’ உச்சரிப்புல வராது. ‘ஸைலன்ட்’ ஆயிடும்.
ஃப்ரெஞ்ச் பாஷைல ‘ஸீ-ப்ரே-ன்னா ‘ரொம்பக் கிட்டே”னு அர்த்தம். ஒரு ட்ரஸ்ட் சொத்தை அதனோட லக்ஷ்யத்துக்கு ரொம்பவும் கிட்டினதான லக்ஷ்யமுள்ள இன்னொரு ட்ரஸ்டுக்குத்தான் மாத்தணும்னு தெரிவிக்கிறதால அந்த விதிக்கு அப்படிப் பேர்.”



