இலங்கையில் கடந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை ஈஸ்டர் பண்டிகை தினத்தை ஒட்டி கிறிஸ்துவ சர்ச்சுகள், ஓட்டல்களில் குறிவைத்து வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப் பட்டது உலகையே உலுக்கியுள்ளது.
இந்நிலையில் அந்தத் தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் என உள்ளூர் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் ஐஎஸ் சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு காரணம் என்று இலங்கை அரசு தகவல் வெளியிட்டது.
இந்நிலையில், சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவலால் காவல் துறையினரே அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
இலங்கையில் நான் தான் குண்டு வைத்தேன் என சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மர்மநபர் ஒருவர் பேசியுள்ளார். மேலும், சென்னை கோயம்பேடு மேட்டுக்குப்பம் பகுதியிலும் தாம் குண்டு வைத்துள்ளதாக கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதை அடுத்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக ஆழ்வார்திருநகரை சேர்ந்த மைக்கேல் பிரீடி என்பவரை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.




