சென்னை கே.கே.நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: சென்னை கே.கே. நகர் பகுதியில் மீனாட்சி பொறியியல் கல்லூரி அருகே 15ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக கே.கே.நகர் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். கே.கே.நகர் பேக்குவரத்து போலீசார் வெளியிட்ட அறிக்கை: கே.கே.நகர் போக்குவரத்து காவல் நிலையத்துக்கு உட்பட்ட லோகநாதன் தெரு மற்றும் ராஜீ தெருவில் வாணி வித்யாலயா பள்ளி மற்றும் மீனாட்சி பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகின்றன. இந்தப் பகுதியில் மாணவ, மாணவிகள் போக்குவரத்துக்கு இடையூறு, விபத்துகள் இன்றி செல்லும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி தொடங்கும் நேரம் காலை 7 மணி முதல் 10 மணி வரையும், அதேபோல் மாலை 3 மணி முதல் 5 மணி வரையும் ஒருவழிப் பாதையாக மாற்றப்படுகிறது. இதையடுத்து சோதனை முறையில் வரும் 15ம் தேதி காலை 7 மணி முதல் ஒரு வார காலத்திற்கு மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்லும்படி போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. வேம்புலி அம்மன் கோயில் தெருவில் இருந்து வரும் வாகனங்கள் இடது புறம் திரும்பி லோகநாதன் தெரு, ருக்மணியம்மாள் தெரு வழியாக வலது புறம் திரும்பி கிழக்கு வன்னியர் தெருவில் சென்று மீண்டும் வலது புறம் ராஜீ தெருவில் முருகேசன் தெருவில் சென்று வேம்புலியம்மன் கோயில் தெருவில் உள்ள வாணி வித்யாலயா பள்ளி மற்றும் மீனாட்சி கல்லூரிக்கு செல்லலாம்.