சென்னை: சென்னையில் நேற்று மாணவிகள் இருவர் சுவர் இடிந்து விழுந்து உயிர் இழந்த சம்பவத்துக்குக் காரணம், ஒரு மாணவி அந்த சுவரில் கட்டியிருந்த கயிற்றில் ஊஞ்சல் ஆடியதுதான் என்றும், சுமார் 40 வருட பழைமையான சுவர் இடிந்து விழுந்தது என்றும் இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளார். சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தை பள்ளிக்கூட ஆயா சீத்தாம்மா நேரில் பார்த்துள்ளார். சுவர் இடிந்ததும் முதலில் ஓடிச் சென்று மாணவிகளைத் தூக்கி கதறி அழுதுள்ளார். இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரணையில் சீத்தாம்மா கூறிய போது… பகல் 1 மணி அளவில் மோனிஷா, நந்தினி, சந்தியா மூன்று மாணவிகளும் அப்போதுதான் சாப்பிட்டு விட்டு வந்தனர். அந்த சுவர் பகுதி பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. அங்கே தண்ணீர் மோட்டார் ஒன்று உள்ளது. அங்குள்ள 2 சுவர்களையும் இணைத்து நடுவில் ஒரு கயிறு கட்டப்பட்டிருக்கும். அதை துணி உலர்த்த பயன்படுத்துவர். அந்தக் கயிற்றில் சில மாணவிகள் ஒருவர் மாற்றி ஓருவர் ஊஞ்சல் ஆடுவதும் உண்டு. அதுபோல் ஒரு மாணவி ஊஞ்சல் ஆடிய போது, அந்த மாணவிகள் இருவரும் சுவர் ஓரம் ஒதுங்கி அமர்ந்திருக்கிறார்கள். அந்த நேரத்தில்தான் பலவீனமான சுவர் இடிந்து விழுந்துள்ளது. மாணவிகள் இருவரும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துவிட்டனர். சற்று தள்ளி நின்ற மாணவி சந்தியா காயத்துடன் தப்பிவிட்டார் என்று கூறியுள்ளார். 1976-ஆம் ஆண்டு கட்டப்பட்ட அந்தக் கட்டடத்தில், அப்போது 10 அறைகளுடன் கூடிய பள்ளிக்கூடம் மற்றும் சமையல் அறை கட்டப்பட்டது. அதில் சமையல் அறை தற்போது பயன்படுத்தாமல் கிடந்தது. இதனால் அந்த சமையல் அறை சுவர்களுக்கு நடுவில் கயிறு கட்டி துணி காயப்போட்டுள்ளனர். பலியான மாணவிகள் மோனிஷா, நந்தினி இருவரும் ஏழை மீனவர் குடும்பத்துக் குழந்தைகள். நந்தினியின் தந்தை மூர்த்தி இறந்துவிட்டார். தாயார் தேசமணி. நந்தினிக்கு ஒரு அக்காள் மற்றும் தங்கை. மோனிஷாவின் தந்தை கதிரேசன் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றிருந்தார். மகள் மோனிஷா இறந்த தகவலை அறிந்து அவரது தாயார் லட்சுமி கதறி அழுதார். காயம் அடைந்த சந்தியாவின் தந்தை பெயர் சக்திவேல். இதனிடையே சென்னை காவல்துறை ஆணையர் எஸ். ஜார்ஜ் நேரில் சென்று மாணவிகள் இறந்த பள்ளியைப் பார்வையிட்டார். பள்ளியின் நிர்வாகி சுசிலா மற்றும் பள்ளி ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதல் கட்ட விசாரணையில் பழைமையான சுவர் இடிந்து விழுந்து மாணவிகள் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. விசாரணை முடிவில்தான் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சொல்ல முடியும் என்றார்.
மாணவி ஊஞ்சல் ஆடியதில் சுவர் இடிந்ததாம்! : மாணவிகள் இருவர் பலியான சோகச் சம்பவம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari