அதிமுக., தோல்விக்கு பாஜக., கூட்டணி காரணமா?!

உள்ளூர் செய்திகள் தமிழகம் நெல்லை லைஃப் ஸ்டைல்

edappadi - 2026

அதிமுக 2019ல் இவ்வளவு மோசமாகத் தோற்றதற்குக் காரணம் பாஜகவுடன் கூட்டணி வைத்தது தான் என்று ஒரு கோட்பாட்டை இப்போது எடுத்து விட ஆரம்பித்திருக் கிறார்கள்.

அதிமுக தனியாகவோ அல்லது பாமகவுடன் மட்டும் கூட்டணி வைத்து நின்றிருந்தாலோ கூட இதைவிட அதிக பாராளுமன்ற இடங்கள் பெற்றிருக்கும் என்கிறார்கள்.

ஆனால் இந்த “லாஜிக்” தோல்விக்கு மட்டும் தான்; அதிமுக போட்டியிட்ட 22 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளில் 9 இடங்களை வென்று மாநில ஆட்சியைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறதே, கூட்டணி அமைத்து திமுக-எதிர்ப்பு ஓட்டுகள் சிதறாமல் இருந்ததும் அதற்கு முக்கியக் காரணம் என்பது போன்ற பேச்சே இல்லை.

அதாவது, வென்றாலும் தோற்றாலும் என்ன இழவானாலும் அதை பாஜக எதிர்ப்பு, மோதி எதிர்ப்பு, இந்துமத எதிர்ப்பு, இந்திய தேசிய எதிர்ப்பு என்பதோடு முடிச்சு போட்டு சித்தரிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த காற்று மண்டலமுமே விஷவாயுவால் சூழப்பட்டிருக்கிறது.

எப்படியானாலும் அடுத்து மோதி தான் பிரதமராகப் போகிறார் என்பது 2019 மார்ச் மாதத்திலேயே ஏறக்குறைய பரவலாக தெரிந்து விட்டது. பாஜக எத்தனை இடங்கள் பெறும், தனியாகவே பெரும்பான்மை கிடைக்குமா அல்லது கூட்டணி உதவி / வெளி ஆதரவு தேவைப்படுமா – இந்த விஷயங்கள் குறித்து தான் சர்ச்சைகளும் கருத்து வேறுபாடுகளும் இருந்தன.

எனவே, அதிமுகவும் தமிழ்நாட்டின் மற்ற குட்டி கட்சிகளும் கூட்டணி வைத்தது ஜெயிக்கும் கட்சியுடன் தானே தவிர ஏதோ சொங்கியான கட்சியுடன் அல்ல. அந்த சாதக அம்சத்தை வைத்து உருப்படியாக பிரசாரம் செய்து உழைப்பைச் செலுத்தி வெற்றி வாய்ப்புக்கு பக்கத்தில் வர முடியவில்லை என்றால், அதிமுக, பாமக ஆகிய இந்த கட்சிகள் பிறகு என்ன ***க்கு தங்களுக்கு இவ்வளவு அரசியல் செல்வாக்கு, இவ்வளவு வாக்கு வங்கி உள்ளது என்று பீற்றிக் கொண்டார்கள்?

modi edappadi - 2026தமிழ்நாடு பாஜகவின் பலவீனங்கள் பற்றி சொல்லத் தேவையில்லை, நன்கு அறிந்ததது தான். செயல் திறன் இன்மை, உழைப்பின்மை, மோதிஜி குறித்த வெறுப்பு பிரசாரங்களுக்கு சரியான பதிலடி தராதது, மத்திய அரசின் சாதனைகளை சரியானபடி விளக்காதது, தலைவர்களின் அதீத ஈகோக்கள் & சுயலாப கணக்குகள், நல்ல தொண்டர்கள் வாய்த்தும் சரியாக பயன்படுத்தாதது, தொண்டர்களுடன் ‘கனெக்ட்’ இல்லாதது – இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

பாஜக போட்டியிட்ட ஐந்தில் நான்கு தொகுதிகளில் தோல்விக்கு இவற்றைக் காரணமாக சொல்லலாம். கன்னியாகுமரியில் அமைச்சர் பொன்னார்ஜி தோற்றதற்கு – அங்கு அதிக எண்ணிக்கையில் உள்ள கிறிஸ்தவர்கள் வேட்பாளர் தங்களுக்குச் செய்த நற்பணிகள், அவரது பண்புநலன் தகுதி எதையுமே பார்க்காமல் குருட்டு மதவெறியுடன் அவருக்கு எதிராக வாக்களித்ததும், சில சாதிய கணக்குகளும் – காரணமாகச் சொல்லப் படுகிறது.

எப்படியானாலும், இந்த ஐந்து தொகுதிகளைத் தவிர்த்து மற்ற இடங்களில் கூட்டணியின் தோல்விக்கு தமிழ்நாடு பாஜகவைக் காரணமாக சொல்வது சரியான தல்ல. நியாயமுமல்ல. துரதிர்ஷ்டவசமாக சில பாஜக ஆதரவாளர்களும் கூட இந்த ரீதியில் பேசுவது வருத்தத்திற்குரியது.

தமிழ்நாட்டின் தற்போதைய எல்லா அரசியல் “கண்ணோட்டங்களும்” அதிமுக, பாமக கட்சிகள் அவை போட்டியிட்ட பாராளுமன்ற இடங்களில் பெற்ற படு தோல்விக்கு பாஜகவை பலிகடாவாக ஆக்குவதிலேயே குறியாக இருக்கின்றன என்பதைக் கவனியுங்கள்.

அந்தக் கட்சிகள் நேரடியாக இப்படிச் சொல்லவில்லை, ஆனால் இத்தகைய பிரசாரத்தை அவை உள்ளூர விரும்புகின்றன, ரசிக்கின்றன என்பது தெளிவு (தேமுதிக அதன் அரசியல் அஸ்தமனத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது, எனவே அதைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை).

தமிழ்நாட்டின் திராவிடக் கட்சிகளுடன் பாஜக கூட்டணி வைப்பதில் உள்ள மிகப்பெரிய அபாயம் இது. வென்றால், அதை பாஜவுக்கு இந்தக் கட்சிகளால் ஏற்பட்ட சாதகமாக சித்திரிப்பார்கள்.

தோற்றால், பாஜகவுடனான சகவாசம் இந்தக் கட்சிகளை பாதாளத்தில் தள்ளிவிட்டதாக ஒப்பாரி வைப்பார்கள். அடுத்து பாஜக செய்ய வேண்டியது என்ன என்பதைப் பிறகு யோசிக்கலாம். இப்போதைக்கு, தமிழ்நாட்டு அரசியல் சூழலின் இந்த கடைந்தெடுத்த போலித்தனத்தை முக்கியமாக சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. Damage control என்ற அளவில் இது மிக அவசியம்.

  • ஜடாயு, பெங்களூர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.