மத்திய அரசுக்கு எதிராக தவறான பிரசாரம் செய்து திமுக வெற்றி பெற்றது: ஜெயக்குமார்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்

jayakumar - 2026

மத்திய அரசுக்கு எதிராக தவறான பிரசாரம் செய்து திமுக வெற்றி பெற்று விட்டது என்று கூறியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார். அதிமுக ஆட்சி கவிழும் என ஸ்டாலின் கூறியது நடக்கவில்லை; அதற்காக அவர் ராஜினாமா செய்வாரா? என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

சி.பா.ஆதித்தனாரின் 38-வது நினைவு நாளை ஒட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் மா.பா.பாண்டியரஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘‘தமிழர் தந்தை என அன்புடன் அழைக்கப்படும் சி.பா.ஆதித்தனாரின் நினைவு தினம் இன்று, தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டை யாராலும் மறக்க முடியாது.

நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்யப்படுமா என்று கேட்டதற்கு, ஆய்வு செய்யப்படும் என்றார் ஜெயக்குமார்.

இந்தத் தேர்தலை பொறுத்தவரை தமிழக அரசு தொடர மக்கள் எங்களுக்கு கொடுத்த அங்கீகரமாக தான் பார்க்கிறோம். ஆர்.கே நகரில் மாயை ஏற்படுத்தி வளைத்தது போல தமிழகத்தையும் வளைத்துவிடலாம் என நினைத்தார் டிடிவி, அவரும் படுதோல்வி அடைந்துள்ளார்.

தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாத நபராக தான் டிடிவி உள்ளார். தமிழக சட்டமன்றத்தில் சட்டையை கிழித்து கொண்டு வெளியே வருவது போல் திமுக-வினர் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியே வராமல் இருந்தால் சரி.

திமுகவின் வெற்றி முதலை கையில் கிடைத்த தேங்காயை போல தான். ஸ்டாலினின் முதல்வர் கனவு ஒரு போதும் நிறைவேறாது என நாங்கள் கூறியது உறுதியாகியுள்ளது.

தேர்தலுக்குப் பிறகு ஆட்சி நீடிக்காது, அப்படி நீடித்தால் ராஜினாமா செய்கிறேன் என துரைமுருகன் சவால் விடுத்தார் இப்போது அவர் ராஜினாமா செய்யத் தயாரா?

இது தற்காலிக வெற்றி. இனி வரும் தேர்தல்களில் அதிமுக மகத்தான வெற்றி பெறும். இந்த முறை எதிர்கட்சியின் பிரசாரம் தவறுதலாக எடுபட்டு விட்டது” என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.