மதுபோதையில் தினமும் மது அருந்த பணம் கேட்டு அம்மாவை மிரட்டி வந்த தம்பியை கொலை செய்த அண்ணன் கைது செய்யப் பட்டார்.
கரூர் மாவட்டம் வாங்கல் காவல் எல்லைக்கு உட்பட்ட ஆத்தூர் சோளியம்மன் கோவில் நத்தமேடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் நந்தகுமார். வயது 21. இவரது தம்பி கௌதமன் வயது 19.
கௌதமன் எப்போதும் மதுவுக்கு அடிமையாக இருப்பவர். கடந்த சில நாட்களாக மதுபோதையில் பணம் கேட்டு தாயிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார் . கடந்த மே 30ஆம் தேதி மது போதையில் அவரது அம்மாவை தகாத வார்த்தையில் பேசி தாக்கியுள்ளார்.
இதனை அவரது அண்ணன் நந்தகுமாரிடம் தாய் தெரிவித்துள்ளார்.
நேற்று ஜூன் 3ஆம் தேதி இரவு 7 மணி அளவில் அதே பகுதியில் உள்ள தனது பாட்டியின் வீட்டில் மது அருந்திவிட்டு போதையில் உறங்கிக் கொண்டிருந்த கௌதமனை எழுப்பி நந்தகுமார் தட்டிக் கேட்டுள்ளார்.
அப்போது இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு கட்டத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்பொழுது அருகிலிருந்த அம்மிக் கல்லை எடுத்து கௌதமனை தலையில் தாக்கியுள்ளார் நந்தகுமார்.
இதனால் ஏற்பட்ட சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் ஓடி வந்து பார்த்தபோது கௌதமன் தலையில் பலத்த அடிபட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்! உடனடியாக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ மனைக்கு கௌதமனை கொண்டு சென்றனர்.
ஆனால் கௌதமன் முன்னதாகவே இறந்துவிட்டதாக மருத்துவமனையில் தெரிவித்தனர். வாங்கல் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்து அதன் பேரில் விசாரணை மேற்கொண்டு நந்தகுமாரை கைது செய்தனர்.
மதுவுக்கு அடிமையான உடன்பிறந்த தம்பியை அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



