
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலை அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்வதற்கு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலை பங்காரு அடிகளார், அவரது மனைவி லட்சுமி பங்காரு அடிகளார் மற்றும் அவரது குடும்பத்தினர் நிர்வகித்து வருகின்றனர்.
கோவிலில் நடக்கும் தைப்பூசத் திருவிழா புகழ் பெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். இந்த கோவில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாமல் உள்ளது.
இந்த நிலையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலை அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்ய வேலூர் அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால் உத்தரவிட்டார்.
இதற்காக காஞ்சிபுரம் அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி தலைமையில் 4 பேர் குழு அமைக்கப்பட்டது. நேற்று மாலை அதிகாரிகள் குழுவினர் மேல்மருவத்தூர் கோவிலில் ஆய்வு செய்ய வந்தனர்.
அவர்கள் அறநிலையத்துறையின் உத்தரவு நகலை கோவில் ஊழியர்களிடம் காண்பித்து ஆய்வு செய்ய முயன்றனர்.
ஆனால் கோவிலில் இருந்த ஊழியர்கள் ஆய்வு செய்ய எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளை கோவிலில் இருந்து வெளியேற்றினர்.
இதனால் அதிகாரிகளால் கோவிலில் ஆய்வு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இதுபற்றி உதவி ஆணையர் ரமணி மேல்மருவத்தூர் போலீசில் புகார் செய்தார். அதில், வேலூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரின் உத்தரவின் பேரில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலை ஆய்வு செய்ய சென்றோம். அப்போது கோவிலில் இருந்த ஊழியர்கள் எங்களை பணி செய்ய விடாமல் தடுத்தனர்.
மேற்படி கோவிலில் ஆய்வு செய்ய வேண்டி இருப்பதால் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் பணி செய்ய விடாமல் இடையூறு அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்து இருந்தார்.
இதுபற்றி காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி கூறும்போது, “மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் ஆய்வு செய்ய வந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை ஊழியர்கள் தடுத்ததாக புகார் வந்துள்ளது. இதுபற்றி விசாரித்து வருகிறோம்” என்றார்.
தமிழகத்தில் உள்ள பழமைவாய்ந்த கோவில்களில் இந்து அறநிலையத்துறை ஆற்றிவரும் அருமையான சேவையை இங்கும் தொடங்கி தங்களது வருமானத்தை அதிகரிக்க அதிகாரிகள் முயற்சி செய்வதாக பக்தா்கள், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.



