கேரள இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி! 86 பேர் கண்காணிப்பில்!

Published:

nipah virus affected kerala youth - 2026

கேரள இளைஞருக்கு நிபா வைரஸ் தாக்குதல் உறுதிப்படுத்தப்பட்டது. கேரளத்தில் நிபா வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபரின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்துள்ளனர். மேலும் 86 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவ தொடங்கியதை தொடர்ந்து மத்திய அரசு அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளது. தில்லியில் உள்ள தனது இல்லத்தில் அதிகாரிகளுடன் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆலோசனை நடத்தினார்.

கடந்த ஆண்டு மே மாதம் கேரளத்தில் நிபா வைரஸ் தாக்குதல் கண்டறியப்பட்டது. நிபா வைரஸால் கோழிக்கோடு மாவட்டத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.

கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் நிபா வைரசால் பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். நிபா வைரஸ் என்பது, வௌவால்கள் மூலம் பரவியிருக்கலாம் என கருதப்பட்டது. இருப்பினும் ஆய்வுகளில் அது உறுதிப்படுத்தப் படவில்லை.

தற்போது மீண்டும் நிபா வைரஸ் கேரளத்தில் தாக்கியுள்ளது கண்டறியப் பட்டது. இது கேரளத்தில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. எர்ணாகுளத்தில் ஒருவர் நிபா வைரஸ் தாக்குதல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகிறார் எர்ணாகுளம் மாவட்டம் வடபரவூரை சேர்ந்த, தொடுபுழாவில் படித்து வரும் கல்லூரி மாணவர் நிபா வைரஸ் தாக்குதல் அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகத் தெரிவிக்கப் பட்டது.

ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

இதை அடுத்து மாநில சுகாதாரத்துறை அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

முன்னதாக, குறிப்பிட்ட மாணவரின் ரத்த மாதிரிகள் புனே ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப் பட்டன. நிபா வைரஸ் தாக்கியுள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக அனுப்பி வைக்கப் பட்ட ரத்த மாதிரிகளின் சோதனை முடிவுகள் கேரள சுகாதாரத் துறைக்கும் அனுப்பி வைக்கப் பட்டன. அதில், வைரஸ் தாக்குதலால் சிகிச்சை பெற்று வரும் நபர் நிபா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட நபருடன் இருந்த மேலும் 86 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், எர்ணாகுளம் மருத்துவக் கல்லூரியில் தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு நிபா வைரஸ் தாக்குதலைக் கையாண்ட அனுபவத்தின் மூலம், அரசு முழு வீச்சில் நிலைமையை எதிர்கொள்ளும் என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

nipah virus affected - 2026

நிபா வைரஸ் தாக்குதல் எப்படி ஏற்படுகிறது?!

ALSO READ:  முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

நிபா வைரஸ் எப்படி பரவுகிறது, அதன் மூலம் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

Nipah என்று வழங்கப்படும் வைரஸ் தாக்குதல் என்பது, விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்த்தொற்று. பழந்தின்னி வௌவால்கள், பன்றி, நாய் உள்ளிட்ட விலங்குகள் மூலமாகவும் இந்த வைரஸ் பரவுகிறது. வைரசால் பாதிக்கப்பட்டோரின் எச்சில், சளி உள்ளிட்டவற்றின் மூலம் மற்றவர்களுக்கு பரவுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த வைரஸ்கள் காற்றின் மூலம் பரவுவதில்லை.

முதன் முதலில் 1998ல் மலேசியாவில் காம்புங் சுங்காய் நிபா என்ற இடத்தில்தான் இந்த வைரஸ் தாக்குதல் கண்டறியப்பட்டது. அதை வைத்தே இதற்கு நிபா வைரஸ் என பெயரிடப்பட்டது. 2004ல், வங்கதேசத்தில் பழந்தின்னி வௌவால்கள் மூலம், மரத்தில் கட்டப்படும் கள் பானைகளில் இந்த வைரஸ் பரவி அதன் மூலம் மனிதர்களை தாக்கியுள்ளது.

2018-ல் கேரளத்தில் 4 மாவட்டங்களில், நிபா வைரஸ் தாக்குதலால் பலர் பாதிக்கப்பட்டனர்! 17 பேர் வரை உயிரிழந்தனர்.

நிபா வைரஸ் தாக்குதலால் சுவாசக் கோளாறுகள் முதல் மூளைக் காய்ச்சல் வரை ஏற்படும். கடுமையான காய்ச்சல், தலைவலி, மனக்குழப்பம், வாந்தி, மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதோடு, நோயாளி கோமா நிலைக்கு செல்லும் அபாயமும் உண்டு. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து உன்னிப்பாகக் கண்காணித்து சிகிச்சை அளிக்கா விட்டால் உயிரிழப்பும் ஏற்படும்.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

நிபா வைரஸ் தாக்குதலுக்கு தடுப்பு மருந்துகள் ஏதும் கண்டறியப்படவில்லை என்பதால் இதன் மீதான அச்சவுணர்வு அதிகம்.

வைரஸ் பாதிப்புள்ள பகுதிகளில் நோயை பரப்பக்கூடிய பன்றிகள், வவ்வால்களை நெருங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் . இதேபோல், மரங்களில் இருந்து விழுந்த பழங்களை உண்ணுவதையும், பதப்படுத்தப்படாத கள்ளை அருந்துவதையும் தவிர்க்க வேண்டும்

Related articles

Recent articles

spot_img