ஆழியாறு அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறப்பு: தமிழக அரசு உத்தரவு

ஆழியாறு உள்பட 4 அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிவிப்பு: கோவை மாவட்டம் ஆழியாறு அணையில் இருந்து பொள்ளாச்சி கால்வாய், வேட்டைக்காரன் புதூர் கால்வாய், சேத்துமடை கால்வாய், ஆழியாறு ஊட்டு கால்வாய் பாசனப் பகுதிகளுக்கு பாசனத்துக்காக புதன்கிழமை (ஏப். 15) முதல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால், கோவை மாவட்டத்திலுள்ள 22 ஆயிரத்து 332 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டின் கீழுள்ள தெற்கு பிரதான கால்வாய், வடக்கு பிரதான கால்வாய் ஆகிய கால்வாய்களின் கீழ் பாசனம் பெறும் நிலங்களின் சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.