
பெண்ணாடம் அருகே வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து பணம், நகை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பெண்ணாடம் அடுத்த இறையூர், நடுத்தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி சித்ரா, 65; சீனிவாசன் கடந்தாண்டு இறந்து விட்டார். மகன் பரணியுடன் சித்ரா வாடகை வீட்டில் வசிக்கிறார்.
இறையூர், அண்ணாநகர் பகுதியில் சித்ரா புதிதாக கான்கிரீட் வீடு கட்டி வருகிறார். இதனால் அருகே தற்காலிக ஓட்டு வீட்டில் உபயோக பொருட்கள், பணம், நகை வைத்துள்ளார்,
நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் வீட்டை பூட்டி விட்டு, நடுத்தெருவில் உள்ள வீட்டிற்கு சென்றனர். மீண்டும் நேற்று காலை 9:00 மணியளவில் சித்ராவின் மகன் பரணி வந்து பார்த்த போது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பெட்டி உடைக்கப்பட்டு, அதிலிருந்த ரூ. 10 ஆயிரம், ஒன்றரை சவரன் நகை திருடு போயிருந்தது. டி.எஸ்.பி., மோகன், இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தனர். கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
கடந்த வாரம் முருகன்குடியில் பைக் திருட்டு; 3 நாட்களுக்கு முன் பெரியகொசப்பள்ளம் ரைஸ் மில்லில் ரூ. 5,000, தளவாட பொருட்கள் திருடு போனது. பெண்ணாடம் பகுதியில் தொடர் திருட்டு நடப்பதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்