அரசு தனியார் பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டாயம்……!

உள்ளூர் செய்திகள் சென்னை நலவாழ்வு

water save 2 - 2026

சென்னையில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தி மழைநீரைச் சேமிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்ச் செல்வி, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களிடையே பேசியதாவது:-

சென்னையில் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் பள்ளிகளில் போதிய நீர் இல்லாமை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, இன்னும் சில நாட்களில் மழைக்காலம் தொடங்க உள்ளது. எனவே, சென்னையில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள் என அனைத்துப் பள்ளிகளும் இந்த வார இறுதிக்குள் தங்கள் பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும்.

வரும் காலங்களில் மழை பெய்யும் போது மொத்த நீரும் அந்த சேமிப்பு தொட்டியில் சேரும் வகையில் கட்டமைக்க வேண்டும். அதன் பயன்களை மாணவர்களிடையே எடுத்துக் கூறுவது கட்டாயம்.

சென்னை மாவட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறையை போக்குவதற்கு இனிவரும் காலங்களில் நிலத்தடி நீரை பாதுகாக்கும் முயற்சியில் இறங்காவிட்டால் நம் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறும் என்பதையும் மாணவர்களிடையே விளக்க வேண்டும்.

மழை பெய்யும்போது கிடைக்கும் நீரை சரியாக சேமிக்காமல், கடலில் கலக்க விட்டதால் ஏற்பட்ட இந்த நிலையை மழைநீர் சேமிப்பின் மூலம்தான் சரிசெய்ய முடியும். இதுகுறித்தான விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.

எனவே, தங்கள் பள்ளிகளில் மழைநீர் சேமிப்பு தொட்டிகள் இருந்தால் அவற்றைத் தூர்வாரி சரியாக பராமரிக்க வேண்டும்.

இது தொடர்பாக புகைப்படத்துடன் கூடிய ஆவணத்தை ஒவ்வொரு பள்ளியும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.