தமிழ் படைப்பாளிகள் பேரியக்கம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் டாக்டர் ராமதாஸ் “வளர்க்கப்படுகின்ற வெறுப்பு அரசியல்” என்ற தலைப்பில் கலந்து கொண்டு பேசினார்.
தன்னிடம் மரம் வெட்டியது பற்றியே கேள்வி எழுப்புவதாகவும் பலமுறை பதில் அளித்தும் மீண்டும் மரம் வெட்டியது பற்றியே கேள்வி எழுப்புகிறார்கள் என்று கடிந்து கொண்டவர்.
இதற்கான பதிலை 100 முறை கூறி விட்டோம் என்று கூறியவர். இனி இந்தக் கேள்வியை கேட்டால் மரத்தை எல்லாம் வெட்ட மாட்டோம், இப்படி கேள்வி கேட்கிற ஆளை வெட்டி போட்டுட்டு அப்புறம் போராட்டம் பண்றோம்னு என்று பதில் கூறியதாக பொது மேடையில் பேசியது சர்ச்சையை எழுப்பியுள்ளது.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் பேச்சு கடும் கண்டனங்களை பெற்று வருகிறது. சென்னை பத்திரிகையாளர் மன்றம் இந்த பேச்சை கண்டித்து கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் இணைச் செயலாளர் பாரதிதமிழன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வயது முதிர்ந்த ஓர் அரசியல் தலைவரின் வாய் உதிர்த்த அநாகரீக வார்த்தைகள் கண்டன அறிக்கையில் கூட குறிப்பிடக் கூடியதாக இல்லை. ராமதாஸின் தரக் குறைவான பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கோபம், விரக்தி என உள்ளக் குமுறல்களை ஊடகங்கள் மீது கொட்டாதீர் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அண்மைக் காலமாக ஊடகவியலாளர்கள் மீது அநாகரீகமான வார்த்தைகள் பயன்படுத்துவது குறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் கவலை தெரிவித்துள்ளது.



