தமிழகம் முழுவதும் கடும் குடிநீர் தட்டுப்பாடு தலை விரித்தாடுகிறது.
இந்நிலையில் சென்னையில் குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டதால் பொதுமக்கள் தினந்தோறும் தண்ணீருக்காக தவித்து வருகிறார்கள். கல்குவாரி நீர் மட்டுமே தற்போது கை கொடுத்து வருகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள தனியார் குடிநீா் கேன்கள் விற்பனை மூலம் நாள்தோறும் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட குடிநீர் கேன்கள் விற்பனை ஆகின்றன.
இதில் 25 சதவீதம் சுகாதாரமற்ற முறையில் போலியான நிறுவனங்களின் பெயரில் தண்ணீர் விற்பனை செய்யப்படுவது அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சுகாதாரமற்ற குடிநீர் விற்பனை குறித்து, பொதுமக்கள் 94440 42322 என்ற மாநில தலைமை அலுவலக ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த குடிநீர் தட்டுப்பாட்டை பயன்படுத்தி தற்போது சுகாதாரமற்ற தண்ணீர் கேன் விற்பனை பல மடங்கு அதிகரித்து உள்ளது.
கோடை வெயில் குறையாத நிலையில் தண்ணீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் தண்ணீர் கேனையே அதிக அளவில் நம்பி உள்ளனர்.
இதனால் சிறிய கடைகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை தண்ணீர் கேன் விற்பனை ஜோராக நடக்கிறது.
இந்த நிலையில் பல இடங்களில் முறையாக சுத்திகரிக்கப்படாத மற்றும் குழாய்களிலும், நேரடியாக லாரிகளிலும் தண்ணீரை பிடித்து வடிகட்டி கேன்களில் அடைத்து சுகாதாரமற்ற முறையில் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் சுகாதார கேடு ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
தரமற்ற குடிநீர் கேன்களை சோதனை நடத்தி பறிமுதல் செய்து வருகிறோம்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் சம்பந்தப்பட்ட குடிநீர் உற்பத்தி நிறுவனங்களிலும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
சம்பந்தப்பட்ட குடிநீர் நிறுவனங்கள் ஐ.எஸ்.ஐ. தரச்சான்று, எப்.எஸ்.எஸ்.ஐ. லைசென்ஸ், ஆழ்துளை கிணறுகள் வைத்திருந்தால் அதற்கான சான்று, எவ்வளவு தண்ணீர் உற்பத்தி செய்ய தடை இல்லா சான்று வாங்கப்பட்டு உள்ளதோ அதை மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும்.
ஒரு கேனில் ஒரு ஸ்டிக்கர் மட்டுமே இருக்க வேண்டும். குறிப்பாக எந்த நிறுவனத்தின் தண்ணீர், கேனில் நிரப்பப்படுகிறதோ அந்த நிறுவனத்தின் ஸ்டிக்கர் மட்டுமே அதில் இருக்க வேண்டும். 20 லிட்டர் கேனில் லேசர் பிரிண்டிங்கில் உற்பத்தி தேதி கண்டிப்பாக இடம் பெற வேண்டும்.
இதேபோல் தண்ணீர் எடுத்து செல்பவர்களும், விற்பனை செய்பவர்களும் பதிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சுகாதாரமற்ற குடிநீர் விற்பனை குறித்து, பொதுமக்கள் 94440 42322 என்ற மாநில தலைமை அலுவலக ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
புகார் மீது 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். போலியான குடிநீர் நிறுவனங்கள் குறித்தும் இந்த எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.



