நெல்லை வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கு: தலைமை பொறியாளர் ஜாமீன் மனு தள்ளுபடி

திருநெல்வேலி: நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள வேளாண் தலைமைப் பொறியாளர் செந்தில்குமாரின் ஜாமீன் மனுவை நெல்லை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் தமிழக வேளாண் துறை அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேளாண் தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் செந்தில்குமார் சார்பில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவுக்கு அரசுத் தரப்பு வழக்குரைஞர் ஆட்சேபம் தெரிவித்தார். மேலும், தற்போது வழக்கு ஆரம்ப நிலையில் இருப்பதால் செந்தில் குமாருக்கு ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கும் என்று கூறினார். இதையடுத்து நீதிபதி நசீர் அகமது, செந்தில் குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.