சென்னை விமான நிலையத்தில் ரூ. 1.5 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ. ஒன்றரை கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து நேற்று காலை, 5:30க்கு, ‘ஏர் இந்தியா’ விமானம் சென்னை வந்தது. இந்த விமானம் மீண்டும் காலை, 6:40க்கு உள்நாட்டு விமானமாக, மும்பை செல்வது வழக்கம். விமான நிலைய ஊழியர்கள் விமானத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஓர் இருக்கையின் கீழே பழுப்பு நிற கவரில், தலா அரை கிலோ எடையில் ஏழு தங்கக் கட்டிகள் இருப்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.1.5 கோடி என அதனைப் பறிமுதல் செய்த சுங்கத் துறை அதிகாரிகள் கூறினர். இந்த விவகாரத்தில் இதனைக் கடத்திக் கொண்டு வந்தவர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப் பட்டுவருகிறது.