
விழுப்புரம் அருகே திருவெண்ணெய்நல்லூரை சேர்ந்த 10ஆம் வகுப்பு சிறுமி பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் மரணம் அடைந்தார். சிறுமியின் குடும்பத்தினரோடு இருந்த முன்விரோதம் காரணமாக; இந்த கொடூர சம்பவம் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
10ஆம் வகுப்பு சிறுமியை கட்டிப்போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்ததாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த சிறுமதுரை காலனியை சேர்ந்தவர் ஜெயபால், பெட்டி கடை வைத்துள்ளார். இவரது மகள் ஜெயஸ்ரீ (14).
பத்தாம் வகுப்பு படித்து வரும் ஜெயஸ்ரீ, ஞாயிற்றுக் கிழமை நேற்று காலை 11:30 மணி அளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப் போது இவரைக்கட்டி வைத்து இவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு சிலர் தப்பியதாகக் கூறப் படுகிறது.
பலத்த தீக்காயமடைந்த மாணவி சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுமி, மாஜிஸ்திரேட்டிடம், அதிமுக முன்னாள் கவுன்சிலர்கள் முருகன், கலியபெருமாள் உள்ளிட்ட சிலர் தன் மீது தீவைத்து எரித்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக எஸ்.பி., ஜெயக்குமார், திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று போலீசாரிடம் விசாரணை நடத்தினார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் முருகன் மற்றும் கலியபெருமாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி, இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள எம்.பி., ரவிக்குமார், விழுப்புரத்தில் சிறுமி பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கை விரைவு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும். இதுபோன்ற செயலில் ஈடுபடுவோரை பயங்கரவாதிகளாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும்… என்று கோரியுள்ளார்.