
பாகிஸ்தானில் பதுங்கியுள்ள நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், இந்தியா மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையடுத்து எல்லையில், பாதுகாப்பை இந்தியா பலப்படுத்தியுள்ளது. மும்பை குண்டுவெடிப்புக்கு காரணமான தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தானில் பல ஆண்டுகளாக பதுங்கியுள்ளார்.
அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு பல முறை இந்தியா கோரியும் பாகிஸ்தான் செவி சாய்க்கவில்லை. எங்கள் நாட்டில் தாவூத் இல்லை எனக்கூறி வருகிறது.
ஆனால், கராச்சியில் தாவூத் இப்ராஹிம் தங்கியுள்ள வீடு என்ற புகைப்படம் சில ஆண்டுகளுக்கு முன்பு ஊடகங்களில் வெளியானது. இதற்கிடையில், இந்தியாவிற்கு எதிரான தாக்குதல்களுக்கு தாவூத் இப்ராஹிமை பயன்படுத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில், தாவூத் இப்ராஹிம் வெளிப்படையாக நடமாடுவதை பலர் பார்த்துள்ளனர்.
லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர்களும் சிலர் தாவூத்தை சந்தித்து பேசியுள்ளதாக தெரிகிறது. இவர்களுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆயுதங்களை கொடுத்து இந்திய நகரங்களின் மீது தாக்குதல் நடத்தும் பணியை ஒப்படைத்துள்ளதாக சில தகவல்கள் வருகின்றன. இதையடுத்து, பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பை இந்தியா பலப்படுத்தியுள்ளது.