பூந்தமல்லி அருகே வீட்டில் இருந்த 550 பவுன் தங்க நகைகளை சிறுக சிறுக, திருடி கள்ளக்காதலிக்கு பரிசாக கொடுத்தவரையும் கள்ளகாதலியையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூந்தமல்லி முத்துநகரை சேர்ந்தவர் சேகர்(40). இவர் தனது தம்பி மற்றும் தாயுடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார். இவருக்கு பூந்தமல்லி பஸ் நிலையம் அருகே ஸ்வீட் கடை உள்ளது. மேலும் பைனான்ஸ் தொழிலும் செய்தார். இதனால் நல்ல வருமானம் கிடைத்து வந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேகரின் மனைவி குடும்ப தகராறில் பிரிந்து சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது பீரோவில் வைத்துச்சென்ற அவரது 300 பவுன் நகை மாயமாகி இருந்தது. இதேபோல் சேகரின் தாயின் 200 பவுன் நகை மற்றும் 5 தங்க கட்டிகளும் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் நகை மாயமானது குறித்து பூந்தமல்லி போலீசில் புகார் செய்தனர். பீரோ உடைக்கப்படாமல் 550 பவுன் நகை திருடு போய் இருந்ததால் வெளியில் இருந்து வந்து மர்ம நபர்கள் திருட வாய்ப்பு இல்லை என்பதை போலீசார் முதலில் உறுதி செய்தனர். இதைத் தொடர்ந்து வீட்டில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் சேகர் வீட்டில் இருந்த 550 நகைகளை சிறுக சிறுக, திருடி தனது கள்ளக்காதலியான வேளச்சேரி கேசரிபுரம் பகுதியை சேர்ந்த சுவாதி என்பவரிடம் பரிசாக கொடுத்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சேகரின் தம்பி கொடுத்த புகாரின் பேரில் சேகர், காதலி சுவாதி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். சேகருக்கு தனது மனைவி பிரிந்து சென்ற பின்னர் நண்பர் ஒருவரது மூலம் சுவாதியுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இருவரும் நெருங்கி பழகி உள்ளனர்.
இதனை பயன்படுத்தி தனது வலையில் சேகரை அவர் வீழ்த்தி உள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக அவ்வப்போது சேகரிடம் இருந்து நகைகளை சுவாதி வாங்கி இருக்கிறார். ஒரு கட்டத்தில் நகைகேட்டு அவர் அன்பு தொல்லை கொடுத்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த சேகர் வீட்டில் இருந்த மனைவி மற்றும் தாயின் நகைகளை யாருக்கும் தெரியாமல் திருடி காதலிக்கு பரிசாக கொடுத்து மகிழ்ச்சி அடைந்து உள்ளார்.
வீட்டில் எப்போதும் போல் சேகர் வந்து சென்றதால் அவர் மீது யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. மேலும் பீரோவில் இருந்த நகைகளை அவர்கள் சரிபார்க்காததும் சேகருக்கு வசதியாக இருந்தது. மொத்தம் 550 பவுன் நகையை வீட்டில் இருந்து திருடி சேகர் கொடுத்து இருக்கிறார். இதேபோல் லட்சக்கணக்கில் சுவாதி பணம் பெற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட சேகர், காதலி சுவாதி ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.