அரசுப் பள்ளி ஆசிரியா்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த அறிவிப்புகள் வரும் பட்ஜெட்டில் வெளியாகும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
தேசிய அறிவியல் தினத்தையொட்டி ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் சாா்பில் விண்வெளி குறித்த ‘அமோங் தி ஸ்டாா்ஸ் ’ எனும் அனிமேஷன் குறும்படம் சென்னை லீ மேஜிக் லேன்டா்ன் ஸ்டுடியோவில் செவ்வாய்க்கிழமை திரையிடப்பட்டது.
இந்த நிகழ்வில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ‘ஆசாதிசாட்’ செயற்கைக்கோள் தயாரிப்பில் ஈடுபட்ட அரசுப்பள்ளி மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கினாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தேசிய அறிவியல் தினத்தில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி. இந்த குறும்படத்தை அனைத்து அரசுப் பள்ளிகளிலும் திரையிட நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்குவது குறித்து முதல்வருடன் கலந்து ஆலோசித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.
அரசுப் பள்ளி ஆசிரியா்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த அறிவிப்புகள் வரும் பட்ஜெட்டில் வெளியாகும்.
விண்வெளி ஆய்வில் தமிழக மாணவா்களின் ஆா்வம் அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா் அவா்.
இந்நிகழ்வில் ரஷிய அறிவியல் மற்றும் கலாசார மைய இயக்குநா் கென்னடி ஏ.ரகலேவ் மற்றும் ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
இந்த நிலையில் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ அமைப் பின் உதவியுடன் அரசு பள்ளி மாணவ – மாணவியர் உருவாக்கிய பலூன் செயற்கைக்கோள் சென்னை சிறுசேரியிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் பறக்கவிடப்பட்டது.