
ஆரிய திராவிட வாதம் ஆங்கிலேயர்களால் ஏற்படுத்தப்பட்டது அது பிரிவினையை ஏற்படுத்த பயன்பட்டது நாம் அனைவரும் ஒன்று ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதே பண்டிட் தீன்தயாள் உபாத்யாயவின் கருத்து. அவரின் சேவைகளை, பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் பாடமாக எடுத்துச் செல்ல வேண்டும் என தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயணன் ரவி பேசினார்.
ஏகாத்ம மானவ வாத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாய நூல் தொகுப்பு வெளியீட்டு விழா ஜூலை 29 சனிக்கிழமை, சென்னை, மயிலாப்பூர் பி.எஸ்.மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.
அதில் தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயணன் ரவி தீந்தயாள் உபாத்யாய நூல் தொகுப்பை வெளியிட்டார். துக்ளக் பத்திரிகை ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, Research and Development foundation for integral humanism- Tamilnadu Chapter தலைவர் மகேஷ் சந்திரா சர்மா, இரட்டைமலை சீனிவாசன் மற்றும் பண்டிதர் அயோத்திதாசர் கொள்ளு பேத்தி நிர்மலா அருள்பிரகாஷ், இந்திய ஹாக்கி அணி முன்னாள் கேப்டன் வாசுதேவன் பாஸ்கரன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவி, பண்டிட் தீன்தயாள் உபாத்யாயவின் செயல்பாடுகளும், தத்துவங்களும் நம் அன்றாட வாழ்வில் வெளிப்பட்டபடியே உள்ளது. நம் நாடு முன்னோக்கிச் செல்வதற்காகப் பாடுபட்டவர் தீன்தயாள் உபாத்யாய. அவர், அனைவரும் ஒன்று தான் என்பதை வலியுறுத்தினார்… என்றார்.
மேலும், இந்த பிரபஞ்சத்தை ஒரே பரமேஸ்வரன் தான் படைத்தார். நாம் பல ஆயிரம் ஆண்டுகளாக ஒற்றுமையுடன்தான் இருந்தோம். கடந்த ஆயிரம் ஆண்டுகளில், குறிப்பாக 400 ஆண்டுகள்தான் அடிமையாக இருந்தோம். மேற்கத்தியவர்களிடம் ராணுவ பலம், தொழில்புரட்சி இருந்தன. அவை நம்மை விட உயர்ந்தது என்று நினைத்து வேறு வழியில்லாமல் நாம் ஏற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. தற்போது அதுவே நம் கலாசாரமாக மாறிவிட்டது.
மேற்கத்திய நாட்டவர்களால் தான் நம்மிடையே பிரிவினை ஏற்பட்டது. ஆரியர்- திராவிடர் என்ற வாதம் ஆங்கிலேயர்களால் ஏற்படுத்தப்பட்டது. இதுவே பிரிவினையை ஏற்படுத்தியது.
தற்போது மொழியின் பெயரில் சிறுபான்மை மனப்பான்மை ஏற்பட்டுள்ளது. பலர் பள்ளிகளை நடத்துகிறார்கள். அதில் அவர்களின் தாய்மொழியில்கூட கற்றுத் தருவதில்லை. ஒரே நிலத்தில் இருந்தவர்கள்கூட, மொழியால் தங்களை இடம்பெயர்ந்து வந்தவர்கள் என்று கருதுகின்றனர்.
உலகளாவிய ஒருமைப்பாடு பற்றிக் கூறிய ஒரே நாடு இந்தியாதான். இந்தியாவே உலகிற்கு ஒளி காட்டுகிறது. நம் பாரதம் வலுவாக இருக்க வேண்டும். அதற்கு தீன்தயாள் உபாத்யாயவின் தத்துவம் இருக்க வேண்டும். அவரின் நூல் தொகுப்புகளை வெளியிடுவது மட்டுமின்றி, ஆய்வுகள் பல மேற்கொண்டு, பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் தீன்தயாள் உபாத்யாயாவின் கருத்துகள், அவர் ஆற்றிய சேவைகளை பாடமாகவும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று பேசினார்.