யூ டூ புருடஸ் எனும் சமூக ஊடகத்தின் கீழ்த்தரமான பிரச்சாரத்தை தமிழக அரசு ஒடுக்க வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
திருப்பதி ஏழுமலையான் திருக்கோயில் லட்டு விவகாரத்தில் பக்தர்களின் மனம் புண்படுத்தி யூ-டூ-புருடஸ் என்ற யூ-டியூப் சேனலில் காணொளி வெளியிட்டுள்ளனர்.
இதே நபர் சிதம்பரம் தில்லை நடராஜரை இழிவுப்படுத்தி அருவருக்கத்தக்க வகையில் வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ வெளியிட்டமைக்கு நடவடிக்கை கோரி, இந்து முன்னணி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த தமிழக காவல்துறை அதன் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டது.
வேற்று மதத்தினரின் நம்பிக்கையை பற்றி கேள்வி கேட்டால் தாமாக முன் வந்து வழக்கு போட்டு கைது செய்து சிறையில் அடைக்கும் காவல்துறை, இந்துக்களை இழிவுப்படுத்தி பேசினாலோ, இந்து வழிபாட்டு முறைகளையும் இந்து தெய்வங்களையும் கொச்சைப்படுத்தி அருவருக்கத்தக்க வகையில் பேசி சமூக பதற்றத்தை தூண்டினால் கூட நடவடிக்கை எடுக்க மறுப்பது ஏன் என புரியவில்லை.
இந்துக்கள் என்ன பேசினாலும் இறைவன் பார்த்துக் கொள்வான் என்று கடந்து சென்று விடுவார்கள் என்ற எண்ணமா என்றும் தெரியவில்லை.
திருப்பதி நைவேத்ய பிரசாதமான லட்டு தயாரிப்பிற்கு நெய் அளித்த ஒப்பந்ததாரர்கள் மிருக கொழுப்பை அதில் கலந்த விவகாரம் உலகம் முழுவதும் உள்ள வெங்கடேச பெருமாள் பக்தர்களின் மனங்களை மிகவும் வருந்த செய்து உள்ளது.
உலகம் முழுவதும் உள்ள கோடான கோடி இந்துக்களின் நம்பிக்கையை சிதைத்த இத்தகைய நிகழ்வினை செய்தவர்களுக்கு எதிராக இந்துக்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருவதால், இந்த உலகம் இதுவரை பார்க்காத வகையில் இந்துக்களின் எதிர்ப்புக் குரல் ஒலிக்கும் போகிறது என்பது உண்மை.
இந்த நேரத்தில் இந்துக்களின் சமய நம்பிக்கையை கொச்சைப்படுத்த நினைப்பவர்களுக்கு இந்து முன்னணி தெரிவிப்பது என்னவென்றால், ஒவ்வொரு முறையும் இந்துக்களின் நம்பிக்கை மீது தாக்குதல் தொடுத்த போதெல்லாம் இந்து சமுதாயம் அதனை வெற்றிகரமாக முறியடித்து முன்னேறியே வந்துள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அது பீட்டா (Peta) போன்ற சர்வதேச சதியால் ஏற்படுத்தபட்ட தமிழகத்து ஜல்லிக்கட்டு தடையானாலும், காஷ்மீர் அமர்நாத் பனி லிங்கத்திற்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஏற்படுத்திய நெருக்குதல் ஆனாலும், கேரள மாநிலம் ஐயப்பன் கோவிலின் புனிதத்தை கெடுக்க நடந்த சதியானாலும் எல்லாவற்றையும் முறியடித்து வரலாறு படைத்தது இந்து சமுதாயம்.
எனவே திருப்பதி லட்டு பிரசாதத்தை களங்கப்படுத்திடும் கயவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்த நெருக்கடியான தருணத்தை இந்து விரோதிகள் பயன்படுத்தி இந்துக்களின் நம்பிக்கைகளை கிண்டலும் கேலியும் செய்து வருவதை தடுக்க காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யூ டூ புருடஸ் என்ற சேனல் அதில் பேசிய நபர் மீதும் இந்து முன்னணி தமிழகமெங்கும் புகார் அளிக்கும். அதனை வாங்கி வைத்துக் கொண்டு புகாரை கிடப்பில் போடாமல் காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க தயங்கினால், மக்கள் தங்கள் கைகளில் சட்டத்தை எடுக்கும் சூழல் ஏற்படும் என்பதை சுட்டிக் காட்டுகிறது இந்து முன்னணி.
கருப்பர் கூட்டம் என்ற பெயரில் முருகப்பெருமானின் கந்த சஷ்டி கவசத்தை இழிவு படுத்திய போது, எப்படி இந்துக்கள் தாமாக முன்வந்து போராடினார்களோ அதே போல் ஏழுமலையான் வெங்கடேச பெருமாளை இழிவுப்படுத்திடும் கயவர்களுக்கு எதிராகவும் ஜனநாயக வழியில் போராட முன்வர வேண்டும்.
அப்போது மட்டுமே இந்து மதத்தையும், இந்து வழிபாட்டு முறைகளையும், இந்து தெய்வங்களையும் இழிவுப்படுத்திட சமூக விரோதிகள் அஞ்சுவர். அது மட்டுமல்லாது இந்துக்கள் ஒவ்வொருவரும் தங்கள் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் ஏழுமலையான இழிவுபடுத்திய யூ டூ புருடஸ் சேனல் மீதும் அதில் பேசியவர் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டி புகார் அளிப்போம்.
அப்போதும் காவல்துறையின் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இந்துமுன்னணி இந்துக்களை ஒன்று திரட்டி மாபெரும் மக்கள் போராட்டமாக மாற்றம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
எனவே காவல்துறை உடனடியாக திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலை இழிவுபடுத்தியவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்…