மதுரை மாவட்டம் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி பண்டிகை சிறப்பு தள்ளுபடி விற்பனையை, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தொடங்கி வைத்தார்.
மதுரை வெங்கலக்கடைத் தெருவில் அமைந்துள்ள கோ-ஆப்டெக்ஸ் அங்கயற்கண்ணி விற்பனை நிலையத்தில் இன்று (27.09.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி பண்டிகை சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தெரிவித்ததாவது:-
கோ-ஆப்டெக்ஸ் என, அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1935-ஆம் ஆண்டில் துவக்கப்பட்டு தொடர்ந்து 89 ஆண்டுகளாக தமிழ்நாட்டிலுள்ள கைத்தறி நெசவாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான முறையில் சேவை புரிந்து வருகிறது.
கைத்தறி ரகங்களின் விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டு, பருத்தி கைத்தறி ரகங்களுக்கு 30% சிறப்புத் தள்ளுபடி வழங்கி உள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள அங்கயற்கண்ணி, மதுரை எம்போரியம், மல்லிகை, அழகப்பன்நகர் ஆகிய நான்கு விற்பனை நிலையத்தில் கடந்த ஆண்டு தீபாவளி விற்பனை ரூ.251.56 இலட்சங்கள் ஆகும். தீபாவளி 2024 விற்பனை குறியீடாக ரூ.345.00 இலட்சங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் காஞ்சிபுரம், ஆரணி, சேலம் திருப்புவனம் பட்டு சேலைகள், கோவை மென்பட்டு சேலைகள், பட்டு வேட்டிகள், கைத்தறி சுங்குடி சேலைகள், காஞ்சி காட்டன், செட்டிநாடு காட்டன், கோவை கோரா காட்டன், சேலம் காட்டன், பரமக்குடி காட்டன், திண்டுக்கல் காட்டன் மற்றும் அருப்புகோட்டை காட்டன் சேலைகள் புதிய வடிவில் ஏராளமாக தருவிக்கப்பட்டுள்ளன. மேலும், நவீன யுக ஆடவர்களை கவரும் விதமாக காட்டன் சட்டை இரகங்கள் /பருத்தி (Linen/Cotton) சட்டைகள், லுங்கிகள் மற்றும் வேட்டிகள் உள்ளன. மகளிருக்காக சுடிதார் இரகங்கள், நைட்டிகள் மற்றும் குர்தீஸ்கள் கண்ணைக் கவரும் வண்ணங்களில் உள்ளன.
கோ-ஆப்டெக்ஸ் ஜவுளி இரகங்களை மின் வணிக வலைதளமான www.cooptex.gov.in என்ற இணைய தளத்தின் மூலமும் பெற்றுக் கொள்ளலாம். கோ-ஆப்டெக்ஸில் மாதாந்திர சேமிப்பு திட்டமும் நடைமுறையில் உள்ளது என, மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, தெரிவித்தார்.
இவ்விழாவில், மண்டல மேலாளர் (கூ/பொ) ஆர்.செந்திவேல் , மேலாளர் எஸ்.பாடலிங்கம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.