
சென்னை அருகே இரவு நேரத்தில் காரில் வந்த பெண்களை, தி.மு.க., கொடி கட்டிய 2 கார்களில் துரத்தி வந்து சிலர் மிரட்டிய வீடியோ காட்சிகள் பெண்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அடுத்த, முட்டுக்காடு பாலம் அருகே இரவு நேரத்தில் கார் ஒன்றில் சில பெண்கள் பயணித்துள்ளனர். அப்போது அவர்களின் காரை 2 கார்களில் வந்த இளைஞர்கள் சிலர் கண்டுள்ளனர். அதில் ஒரு காரில் தி.மு.க., கொடி கட்டப்பட்டிருந்தது. பெண்களை கேலி செய்த அவர்கள், ஒரு கட்டத்தில் பெண்கள் வந்த காரை துரத்தியுள்ளனர்.
இதைக் கண்ட பெண்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். என்ன நடக்கிறது என்பதே புரியாமல், பயந்து போய், பீதியில் அலறிய பெண்கள் தாங்கள் வந்த காரை நிறுத்தாமல் ஓட்டியுள்ளனர். பின்னால் இரண்டு கார்களில் அதிவேகத்தில் துரத்திக் கொண்டு வந்த அந்த நபர்கள், பெண்கள் வந்த காரை முந்திச்சென்று சாலையின் நடுவழியில் மறித்துள்ளனர். அச்சத்தில் இருந்த பெண்கள், காரை ரிவர்ஸ் எடுக்க முயற்சித்த போதும், விடாமல் துரத்தியுள்ளனர். அந்தப் பெண்கள் காரை நிறுத்த, திமுக., கொடி கட்டிய காரில் இருந்து இறங்கி வந்த ஒருவர் அவர்களை நோக்கி வேகமாக வந்து, ஆவேசமாக தட்டி ஏதோ கூறி மிரட்டியுள்ளார்.
நிலைமையின் முக்கியத்துவத்தை உணர்ந்த பெண்களில் ஒருவர், தமது செல்போனில் நடந்த அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்திருக்கிறார். அவர்கள் பயத்தில் தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு போன் செய்யும்படி கூறும் உரையாடலும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ இணையதளங்களில் வைரலானது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், கானாத்தூர் காவல் நிலையத்தில் இந்தச் சம்பவம் குறித்து புகார் அளித்தார். அந்தப் புகாரில் நடந்த சம்பவத்தை குறிப்பிட்டு, இளைஞர்கள் வந்த 2 கார்களில் வெள்ளை நிறம் கொண்ட ஒரு காரில் திமுக., கட்சிக் கொடி கட்டப்பட்டு இருந்தததையும், தங்களை மிரட்டிச் சென்றதையும் சுட்டிக்காட்டியுள்ளார். தங்களை சாலையில் மிரட்டியதுடன், தங்களின் வீடு வரை பின்தொடர்ந்து வந்து பயமுறுத்தியதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம் ஜன.25ஆம் தேதி இரவு நடந்ததாகவும் அதில் குறிப்பிடப் பட்டிருக்கிறது.
இந்தப் புகாரின் பேரில் வீடியோ காட்சிகளை அடிப்படையாக வைத்து 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், கார் சேஸிங்கில் நடந்தது என்ன? என்பது குறித்து போலீஸார் விளக்கம் அளித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. அதில்,
கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருந்து பெண்களின் வீடு வரை காரை துரத்திச் சென்ற இளைஞர்கள் தொடர்பில், முட்டுக்காடு அருகே ஜன.25ம் தேதி தனது காரை 2 கார்கள் இடைமறித்ததாக பெண் புகார் அளித்தார். இரு கார்களில் இருந்தவர்கள் அப்பெண்களின் வீடு வரை துரத்தி வந்ததாக புகாரில் தகவல் கொடுக்கப்பட்டிருந்தது.
அந்தப் பெண்கள் தங்கள் காரை ரிவர்ஸ் எடுத்த போது, தங்களின் வாகனத்தை இடித்ததாகவும், ஆனால் அது தொடர்பாக மன்னிப்பு கூட கோரவில்லை என்றும் கூறி அப்பெண்ணின் வீட்டருகே அந்த இளைஞர்கள் வாக்குவாதம் செய்துள்ளதாகவும் போலீஸார் கூறினர்.
ஆனால் அந்த இளைஞர்களின் காரை தாங்கள் இடிக்கவில்லை என்றும், இது தொடர்பான வீடியோக்கள், சிசிடிவி காட்சிகளை ஆய்ந்தால் உண்மை தெரியும் என்றும் புகார் அளித்த பெண் மறுப்பு தெரிவித்து ஊடகத்திடம் பேசியுள்ளார். இருப்பினும், பெண்கள் சென்ற காரை விரட்டியதாகக் கூறப்படும் கார்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் என்ன நடந்தது என ஆய்வு செய்து வருகிறோம் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
அண்ணாமலை கண்டனம்!
இந்நிலையில், தி.மு.க. கொடி கட்டிய காரில் அத்துமீறியுள்ளனர் என்று பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், சென்னை இ.சி.ஆர் சாலையில் பெண்களை இளைஞர்கள் துரத்திய வீடியோ பார்க்கும் போது பதறுகிறது. தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்பதற்கு இ.சி.ஆர். சம்பவமும் ஓர் உதாரணம் என்று, அவர் கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
சென்னை ஈசிஆரில் காரில் சென்ற பெண்களை சிலர் துரத்திச் சென்ற சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை மேற்கொள்ள திமுக கொடி என்பது லைசன்சா? என்று, எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தள பதிவு:
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் இளம்பெண்கள் சிலர் பயணித்த மகிழுந்தை, திமுக கொடி கட்டப்பட்ட மகிழுந்தில் வந்த சிலர் வழிமறித்து மகிழுந்தில் இருந்த பெண்களிடம் அத்துமீறும் காட்சிகள் அடங்கிய காணொலி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. சென்னை புறநகரின் மிக முக்கியமான சாலையில் பயணிக்கும் பெண்களை வழிமறித்து தொல்லை கொடுக்கும் அளவுக்கு சமூக விரோதிகளுக்கு துணிச்சல் ஏற்பட்டிருப்பது அச்சமும் கவலையும் அளிக்கிறது.
பாதிக்கப்பட்ட மக்கள் இது குறித்து கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், குற்றம் செய்த சமூக விரோதிகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதியும், பாதுகாப்பும் வழங்க வேண்டிய காவல்துறையினரே குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
சென்னையின் மிக முக்கிய சாலையில் பயணிக்கும் பெண்களை மகிழுந்தைக் கொண்டு தடுத்து நிறுத்தும் துணிச்சல் சமூக விரோதிகளுக்கு எவ்வாறு ஏற்பட்டது? மகிழுந்தில் திமுக கொடி கட்டப்பட்டிருந்ததாலா? அல்லது தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக எத்தகைய குற்றங்கள் நடந்தாலும் அதை அரசும், காவல்துறையும் கண்டு கொள்ளாது என்பதாலா? என்பது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும்.
சென்னையில் அண்மைக்காலமாக பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது கண்டிக்கத்தக்கது. கிழக்குக் கடற்கரை சாலையில் பெண்களை வழிமறித்து அத்துமீறிய, திமுக கொடி கட்டப்பட்ட மகிழுந்தில் வந்தவர்கள் மீது காவல்துரையினர் வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமூகத் தளத்தில் ஒரு குரல்
இதனிடையே இந்தச் சம்பவம் தொடர்பாக சமூகத் தளங்களில் தமிழக போலீஸை விமர்சித்து, பலர் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றன. அதில் ஒருவர் வெளியிட்ட கருத்து…
ஆனா… காரை துரத்தின குருப்ல ஒருத்தனை கூட பிடிக்காமலேயே “காரை ஏன் துரத்தினார்கள்?”னு காரணத்தை கண்டுபிடிச்சு சொன்னான் பார்த்தியா… உலகத்துலேயே “திராவிட போலீஸை” அடிச்சிக்க ஆளே இல்லய்யா…
காரை விரட்டிய குண்டர்களில் ஒருத்தனைக் கூட இன்னமும் பிடிச்சு விசாரிக்கலை…,
“காரை நாங்க இடிக்கவே இல்லை”ன்னு அந்தப் பெண்கள் தரப்புல சொல்றாங்க…,
அப்புறம் எப்படி முதல் கட்ட விசாரணையில் “காரை இடித்ததால் பின் தொடர்ந்து விரட்டினார்கள்”னு காவல்துறை கண்டு பிடிச்சிருப்பாங்க…
இந்தக் கேஸ்ல எத்தனை “சார்” கள் சம்பந்தப்பட்டு இருக்காங்கனு தெரியலையே…