
தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகப் பரவும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும், போதுமான அளவு கையிருப்பில் உள்ளதால், வழக்கமாக வாங்குவது போல் மக்கள் இயல்பு வாழ்க்கையின் படி நடந்தாலே செயற்கை தட்டுப்பாடு இல்லாமல் இருக்கும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளன.
தமிழ்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கிடைக்கிறது – அச்சத்தில் அதிகமாக வாங்க வேண்டாம் என இந்தியஆயில் வேண்டுகோள் விடுத்துள்ளது. அந்நிறுவனத்தில் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை…
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IndianOil) தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கையிருப்பு இருப்பதாகவும், பெட்ரோல் நிலையங்களுக்கு விநியோகம் வழக்கம்போல சீராக நடைபெற்று வருவதாகவும் பொதுமக்களுக்கு உறுதி அளிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள இந்தியஆயிலின் அனைத்து பெட்ரோலிய முனையங்களும் மற்றும் விநியோக மையங்களும், வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் போதுமான அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் இருப்புடன் உள்ளன.
சில இடங்களில் அச்சத்தில் அதிக அளவில் எரிபொருள் வாங்கும் நிலை ஏற்பட்டதால், சில பெட்ரோல் நிலையங்களில் தற்காலிகமாக விநியோகத்தில் குறைவு ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் பற்றாக்குறை எதுவும் இல்லை என்றும், திடீர் தேவையால் ஏற்பட்ட இந்த நிலையை சமாளிக்க பாதிக்கப்பட்ட பெட்ரோல் நிலையங்களுக்கு முன்னுரிமையுடன் விநியோகம் மேற்கொள்ளப்படுவதாகவும் இந்தியஆயில்
தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களின் இருப்பு நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு எரிபொருள் கிடைப்பதை வழக்கு நிலைக்கு கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அச்சத்தில் அதிகமாக வாங்குதல் அல்லது தேவையற்ற முறையில் எரிபொருளை சேமித்து வைப்பதை பொதுமக்கள் தவிர்க்குமாறு இந்தியஆயில் கேட்டுக் கொள்கிறது. ஏனெனில் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கிடைக்கின்றன மற்றும் விநியோகச் சங்கிலி சீராக செயல்பட்டு வருகிறது. மேலும், பிளாஸ்டிக் கேன்கள், பாட்டில்கள் அல்லது அனுமதி பெறாத பாத்திரங்களில் பெட்ரோலை சேமித்து வைப்பது போன்ற பாதுகாப்பற்ற செயல்களை பொதுமக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று இந்தியஆயில் வலியுறுத்துகிறது. இது கடுமையான பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தக் கூடும்.
வாடிக்கையாளர்களின் பாதுகாப்பையும் எரிபொருள் தடையில்லா கிடைப்பையும் உறுதி செய்வதில் இந்தியஆயில் தொடர்ந்து உறுதியாக செயல்பட்டு வருகிறது, மேலும் தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.
மேலும், தமிழ்நாட்டில் எண்ணெய் தொழில்துறைக்கான மாநில ஒருங்கிணைப்பாளர் திரு M.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்ததாவது: மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு துறை பெட்ரோலிய முனையங்களிலும் (IOC, BPC & HPC) போதுமான அளவில் எரிபொருள் இருப்பு உள்ளது. மேலும், சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து எரிபொருள் விநியோகம் வழக்கம்போல நடைபெற்று வருகிறது; தொடர்ந்து தடையில்லா விநியோகத்தை உறுதி செய்ய உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.




