சென்னையில் ஆட்சியர் திட்டியதால் தாசில்தார் தற்கொலை முயற்சி

சென்னை :
சென்னையில் ஆட்சியர் திட்டியதால், தாசில்தார் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதை அடுத்து, தாசில்தார்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் பல பகுதிகள் மூழ்கின. இதனையடுத்து நிவாரண பணிகளில் மாநகராட்சியினரும், வருவாய் அலுவலர்களும் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு வீடு இழந்தவர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்படும் என அறிவித்தது. அதற்கான கணக்கெடுப்பு பணியில் சென்னை மாவட்ட வருவாய் அலுவலர்களும், ஊழியர்களும், பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்கள் தினமும் தாங்கள் கணக்கெடுத்த விவரங்களை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள வெள்ள நிவாரண தடுப்பு பணி அதிகாரிகளிடம் சமர்பித்து வருகிறார்கள்.

இந்தப் பணிகளின் ஒருங்கிணைப்பாளராக தண்டையார்பேட்டை தாசில்தார் சத்ய பிரசாத் செயல்பட்டு வருகிறார். இவர் சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்.

நேற்று முன்தினம் வெள்ள நிவாரணம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றபோது, கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி, பிற மாவட்ட ஊழியர்கள் முன்னிலையில் தாசில்தார் சத்ய பிரசாத்தை தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும் பணி சம்பந்தமாக அவருக்கு நெருக்கடி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த தாசில்தார், அங்கு இருந்த குளியல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிகிச்சை முடிந்து அவர் வீட்டுக்குத் திரும்பிவிட்டார். இந்நிலையில் தாசில்தாரை தரக்குறைவாக பேசிய ஆட்சியரைக் கண்டித்தும், அவரை வேறு இடத்திற்கு மாற்றக் கோரியும் நேற்று காலை சென்னை தாசில்தார்கள் 50-க்கும் மேற்பட்டோர் ராஜாஜி சாலையில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக இந்த போராட்டம் நடந்ததால், ஆட்சியர் அலுவலக பணிகள் முடங்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆட்சியர் சுந்தரவள்ளி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து, சத்யபிரசாத்திடம் மன்னிப்பு கோருவதாக அவர் கூறினார். இதையடுத்து தாசில்தார்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.