
ஆளுநர் விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பிய பத்து தீர்மானங்களை மீண்டும் நிறைவேற்றி ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் அதிமுக., பாஜக., உறுப்பினர்கள் வெளிநடப்புக்குப் பின், குரல் மூலம் நிறைவேற்றப்பட்டது.
இன்று காலை, தமிழ்நாடு சட்டசபை சிறப்புக்கூட்டம் தொடங்கியது. மறைந்த உறுப்பினர்களுக்கு சட்டசபை உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். மறைந்த பங்காரு அடிகளாருக்கும், மறைந்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சங்கரய்யாவிற்கும் இரங்கல் தீர்மானம் வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.
அதன் பின் ஸ்டாலின் பேசிய போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மை அரசின் மசோதாக்களை ஆளுநர் நிறைவேற்றி தர வேண்டும் என்பது ஆளுநரின் கடமை. தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். தமிழ்நாட்டையும், மக்களையும் அவமதித்துள்ளார் என்று கூரினார்.
இந்திய ஜனநாயகம் மிக மோசமான நிலையில் உள்ளது. மக்களாட்சி தத்துவத்தின்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பது ஆளுநரின் பொறுப்பு. விளக்கம், சந்தேகம் இருந்தால் அரசிடம் கேட்கலாம். ஒருபோதும் அவர் கோரிய விளக்கங்கள் கொடுக்கப்படாமல் இருந்ததில்லை என்று பேசிய ஸ்டாலின், சில இடையூறுகளால்தான் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது. மத்திய அரசின் இந்த போக்கு நீடித்தால் ஜனநாயகம் மோசமான நிலைக்கு தள்ளப்படும்… என்று கூறி, சட்டமன்ற சிறப்புக்கூட்டத்தில் தனித்தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார்.
சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்கள்:
- சென்னை பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
- தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
- தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
- தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
- தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
- தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
- தமிழ் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
- தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
- அண்ணா பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
- தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட திருத்த மசோதா
சட்டப்பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு.
ஆளுநர் பற்றி பேசக் கூடாதுனு சொல்லிட்டு, பேச விட்டு கேட்டுக்கிட்டு இருக்கீங்க.. என்று சபாநாயகரிடம் கேள்வி எழுப்பினார் பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன். அதற்கு சபாநாயகர் அப்பாவு, ஆளுநர்களின் செயல்பாட்டைத்தான் உறுப்பினர்கள் விமர்சித்தார்கள். ஆளுநர்கள் மாறுவார்கள், நாளை நீங்கள் கூட ஆளுநராகலாம்… என்று பதிலளித்தார்.
முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானத்தை எதிர்த்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தனித்தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்வதாக நயினார் நாகேந்திரன் அறிவித்தார்.
மசோதாக்களில் உள்ள சட்ட சிக்கல்களை அரசு ஆய்வு செய்ய வேண்டும். அமைச்சர் கூறவேண்டிய கருத்துகளை சபாநாயகரே தெரிவித்து வருகிறார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் பேரவையை கூட்டியது ஏன்..? என்று, அரசு கொண்டு வந்த தனி தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
“ஆளுநர் இந்த 10 சட்ட முன்வடிவுகளையும் நிராகரிக்கவில்லை, நிறுத்தி வைத்துள்ளதாக நான் கருதுகிறேன்” என்று கூறிய எடப்பாடி பழனிசாமிக்கு, “மசோதா நிலுவையில் இருப்பதாக அர்த்தம் இல்லை, அது திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக அர்த்தம்” என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்தார்.
“ஆளுநருக்கோ, குடியரசுத்தலைவருக்கோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை அனுப்பி வைக்கும் போது, With Held என்று சொல்வது நிராகரிப்பதாகவே பொருள்” என்று, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.
அப்போது, நிலுவையில் உள்ள அனைத்து மசோதாக்களுக்கும் வழக்கு தொடர்ந்துள்ளீர்களா…?”- என்று பேரவையில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். “நிச்சயமாக உண்மையாக மாநில சுயாட்சி கொள்கையோடு வழக்கு தொடர்வோம்; மீதமுள்ள சட்ட முன்வடிவுகள் குறித்தும் வழக்கு விசாரணையில் எடுத்துக் கூறுவோம்” என்று மாநில முதல்வர் ஸ்டாலின் கூறியதை அடுத்து, சட்டப்பேரவையில் இருந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
ஆளுநரின் செயல்பாடு, பல்கலைக்கழக துணை வேந்தர் தேர்வு குறித்து காரசாரமாக விவாதம் நடந்த நிலையில், அதிமுக வெளிநடப்பில் ஈடுபட்டதால், ஆளுநர் திருப்பி அனுப்பி வைத்த 10 சட்ட மசோதாக்களும் மீண்டும் நிறைவேற்ற, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் திமுக., ஆதரவு உறுப்பினர்களுடன் ஆளும் கட்சியின் தீர்மானமாக நிறைவேறியது.
மக்கள் பிரச்னையை திசை திருப்ப ஆளுநரைப் பற்றி பேசுகின்றனர்: நயினார் நாகேந்திரன்
ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தின் போது வெளிநடப்பு செய்த பாஜக., சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், மக்கள் பிரச்னையைத் திசை திருப்ப ஆளுநரைக் கையில் எடுக்கின்றனர் திமுக., வினர் என்று குறிப்பிட்டார்.
மேலும், திமுக ஆட்சியில் நடக்கும் குற்றங்களை மறைக்கவே ஆளுநரை விமர்சனம் செய்கின்றனர். அனைத்து குடும்பப் பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் கொடுப்போம் எனக் கூறினர். ஆனால், எத்தனை பேருக்கு கொடுத்துள்ளனர். பாதி பேருக்கு கொடுக்கவில்லை. மக்கள் பிரச்னையை கவனிக்காமல் ஆளுநர் பிரச்னையை கையில் எடுக்கின்றனர். முதல்வருக்கு வேந்தர் பதவி என்ற கோரிக்கை தேவையான ஒன்றா? மக்கள் பிரச்னை பற்றி பேசாமல் தேவையின்றி ஆளுநர் குறித்து பேசுகின்றனர்… என்று கூறினார்.