
பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும் என்று ஒரு சொலவடை நம் நாட்டில் உண்டு. இங்குள்ள லோக்கல் அரசியல்வாதிகளே பொருந்தாப் பொய்களை உண்மைகளென சொல்லிக் கொண்டிருக்கும் காலத்தில், அவர்களுக்கு அப்பனாக இருக்கக் கூடிய சீனக் கம்யூனிஸ்ட் தலைவர், உண்மைகளையா பேசிவிடப் போகிறார்?! அப்படி ஒரு பின்னணிச் சூழலை இன்று உலகுக்குக் காட்டியிருக்கிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்.
“சீனா ஒரு போதும் போரையோ மோதலையோ துாண்டவில்லை; இதுவரை வெளிநாட்டு நிலங்களை ஒரு அங்குலம் கூட நாங்கள் ஆக்கிரமிக்கவில்லை,” என சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறியது இன்று பேசுபொருளாகி இருக்கிறது.
ஆசிய- பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு மாநாடு அமெரிக்காவில் நேற்று முடிவடைந்தது. இதில் பங்கேற்க அமெரிக்கா சென்ற சீன அதிபர் ஜி ஜின்பிங், சான் பிரான்சிஸ்கோவில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர்…
“சீனாவில் மக்கள் குடியரசு நிறுவப்பட்டதில் இருந்து 70 ஆண்டுகள் மற்றும் அதற்கும் மேலாக எந்த நாட்டுடனும் எந்தவிதமான மோதலையோ, போரையோ தூண்டவில்லை. இன்னும் சொல்லப் போனால் இதுவரை ஒரு அங்குலம் கூட எந்தவொரு வெளிநாட்டு நிலத்தையும் எங்கள் நாடு ஆக்கிரமித்தது இல்லை,” என்றார்.
அவரது கூற்று உண்மையா என்பது குறித்து சீனாவை சுற்றியுள்ள அனைத்து நாடுகளும் ஒருமனதாக ஒப்புக்கொண்டு வெளியில் சொன்னால் சீன அதிபரின் கருத்தை உண்மை என ஏற்கலாம்.
கடந்த 2020 – கொரோனா கால கட்டத்தில், கொரோனா பரவலுக்குக் காரணம் சீனா என்று உலகமே கடுப்பில் இருந்த போது, இந்திய எல்லை அருகே உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவம் ஊடுருவலில் ஈடுபட்டு, அதைத் தடுக்க முற்பட்டதால், இந்திய, சீன ராணுவத்திற்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பிலும் உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டன. என்றாலும், சீனா வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு அதில் பாதிப்பும், உயிரிழப்பும் ஏற்பட்டது. ஒருவேளை இந்தியா தரப்பில் சீன ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு இரு தரப்பு மோதல் ஏற்பட்டிருந்தால், சீனா இப்படியா அமைதியாக வேடிக்கை பார்த்திருக்கும்?! அதிலிருந்தே சீன அதிபரின் கூற்று பெரும் பொய் எனத் தெரிகிறதல்லவா?
இந்தியப் பகுதிகளில் அத்துமீறி சீன வீரர்கள் ஊடுருவியதுதான் இந்த மோதலுக்குக் காரணம். இதனால் இரு தரப்பிக்கும் இடையே போர் மேகம் சூழும் அபாயம் ஏற்பட்டது. இதை அடுத்தே இரு நாட்டு எல்லைகளிலும் ராணுவம் குவிக்கப்பட்டது. சீன வீரர்கள் அத்துமீறி இந்திய பகுதிக்குள் நுழையாமல் இருந்தால், இந்தச் சண்டை ஏற்பட்டே இருக்காதே! ஆனால் சண்டை நடந்தது உண்மை, தன் தரப்பு வீரர்கள் கொல்லப்பட்டது உண்மை என்றுதானே சீனாவும் கூறியது.
நிலைமை இவ்வாறு இருக்க இதற்கு நேர்மறையான கருத்துகளை சீன அதிபர் தற்போது கூறியுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மட்டுமின்றி ஜப்பான், தைவான், கொரியா, மங்கோலியா என அண்டை நாடுகளிலும் சீனா அத்துமீறலில் ஈடுபட்டு வரும் நிலையில் எந்த வெளிநாட்டு நிலங்களையும் ஆக்கிரமிக்கவில்லை என ஜி ஜின்பிங் நெஞ்சறிந்தே பொய் சொல்லியிருக்கிறார்.
முன்னதாக, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ‘சர்வாதிகாரி’ என விமர்சித்ததற்கு சீனா கண்டனம் தெரிவித்தது. இது குறித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில், ”சீன அதிபர் மீதான இந்த வகையான பேச்சு மிகவும் தவறானது. இது பொறுப்பற்ற முறையில் அரசியலைக் கையாள்வதைக் காட்டுகிறது. இதை சீனா எதிர்க்கிறது. சீனா – அமெரிக்க உறவுகளில் முரண்பாட்டை விதைப்பதற்கும், அந்த உறவை சிதைப்பதற்கும் தவறான நோக்கங்களுடன் சிலர் பல முயற்சிகளை செய்து வருகின்றனர். இது எப்போதும் வெற்றி பெறாது,” என்று குறிப்பிட்டார்.
6 ஆண்டுகளுக்குப் பிறகு சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்கா சென்ற நிலையில், அவரை “சர்வாதிகாரி” என்று ஜோ பைடன் விமர்சித்ததை சீனா அமெரிக்க எதிர்ப்பு அரசியலாக்கியது.
சீன அதிபரை சந்தித்த சூடு அடங்குவதற்குள், அவர் ஒரு சர்வாதிகாரி என்று ஜோ பைடன் விமர்சித்தார். இது இப்போது சீனாவின் கையால், சர்வதேச அரசியலில் பேசுப்பொருளாகி உள்ளது. அமெரிக்கா – சீனா இடையிலான உறவு கடந்த சில ஆண்டுகளாகவே நட்புடன் இல்லை. கடந்த பிப்ரவரி மாதம், சீனாவின் உளவு பலூன் அமெரிக்காவில் சுட்டு வீழ்த்தப்பட்டது. தைவான் அதிபரை அமெரிக்க சபாநாயகர் சந்தித்துப் பேசினார். இவை எல்லாம், இரு நாட்டு உறவை மேலும் கசப்பாக்கியது.
ரஷ்யா – உக்ரைன் போர், இஸ்ரேல் – ஹமாஸ் யுத்தம், அமெரிக்கா மற்றும் சீனாவை எதிர் எதிர் துருவங்களில் நிறுத்தின.
இந்நிலையில் சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா சென்ற சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, ஜோ பைடன் உற்சாகமாக வரவேற்றார். சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற (APEC) ஏபெக் பொருளாதார உச்சிமாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து, கலிபோர்னியா சென்ற ஜி ஜின்பிங், அமெரிக்கா அதிபர் ஜோ பைடனை சந்தித்து அரசு ரீதியான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் அசாதாரண சூழல், தைவான் பிரச்னை, காலநிலை மாற்றம், உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், இரு நாட்டு ராணுவ உறவுகள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்நிலையில், கலிபோர்னியாவில் அந்நாட்டு தொழிலதிபர்கள் மாநாட்டில் பேசிய ஜி ஜின்பிங், அமெரிக்காவின் உள்நாட்டு விவகாரத்தில் சீனா தலையிடாது என்றும், அதனை அமெரிக்காவும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திப் பேசினார். அதாவது நாங்கள் செய்யும் குற்றச் செயல்களை நீ கண்டுகொள்ளக்கூடாது, உன் குற்றச் செயல்களை நாங்களும் கண்டுகொள்ள மாட்டோம் என்ற இருதரப்பு புரிந்துணர்வை பொதுப்படையாக வெளிப்படுத்தினார்.
முன்னர், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, அமெரிக்க அதிபர் ஜோ பிடன், “அவர் ஒரு சர்வாதிகாரி|” என்று விமர்சித்திருந்தார். இந்நிலையில், தற்போதைய சீன அதிபருடனான சந்திப்பு குறித்து ஜோ பைடன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்த போது, “சீன அதிபரை இன்னும் சர்வாதிகாரியாகத் தான் கருதுகிறீர்களா?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, அதற்கு அவர், “ஜி ஜின்பிங் கம்யூனிச நாட்டை வழிநடத்தும் ஒரு சர்வாதிகாரி” என்று மீண்டும் உறுதிபடக் கூறினார். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, சீன அரசாங்கம் முற்றிலும் மாறுபட்டது என்பதையும் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.
அமெரிக்க அதிபர் சீன அதிபரை ஒரு சர்வாதிகாரி என்று குற்றம் சாட்டுவதும், அதற்கு பதிலளிக்கும் விதத்தில், நாங்கள் சர்வாதிகாரித்தனம் செய்யவில்லை, அண்டை நாட்டு நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை என்றெல்லாம் நெஞ்சறிந்து சீன அதிபர் பொய் சொல்லுவதும் அமெரிக்க மண்ணில் இப்போது கேலிக்குரிய விவாதப் பொருளாகியிருக்கிறது.