கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் வருமான வரி சோதனை: முக்கிய ஆவணங்கள் சிக்கின

சென்னை:
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறையினர் புதன்கிழமை 4 மணி நேரம் சோதனை செய்து, முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர்.
மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்த போது, ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் வாங்கியது. இந்தப் பங்குகளை வாங்கியதில் விதிகள் மீறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தப் பங்குகளை வாங்குவதற்கு ஏதுவாக அப்போது மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் தலைமையிலான அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியம் உதவியதாக சிபிஐ சந்தேகிக்கிறது. இந்தப் பங்குகள் கைமாறுவதற்கு முன்னதாக, கார்த்தி சிதம்பரம் முக்கியப் பங்குதாரராக இருந்த “அட்வான்டேஜ் ஸ்டிராட்டஜிக் கன்சல்ட்டிங்’ நிறுவனத்துக்கும், “ஏர்செல் டெலிவெஞ்சுர்ஸ்’ நிறுவனத்துக்கும் இடையே ரூ.26 லட்சம் பணப் பரிவர்த்தனை நடந்ததை மத்திய வருமான வரித் துறை கண்டுபிடித்தது.
இது தொடர்பாக விசாரணைக்கு வரும்படி “அட்வான்டேஜ் ஸ்டிராட்டஜிக் கன்சல்ட்டிங்’ நிர்வாகிகளுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. இந்த நிறுவனம், தமிழகத்தில் பிரபலமான தனியார் கண் மருத்துவமனையின் 1.5 லட்சம் பங்குகளை மறைமுகமாக வாங்கியதாக அமலாக்கத் துறை விசாரணையில் தெரிய வந்தது. இவை தொடர்பாக அமலாக்கத் துறை, வருமானவரித் துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தத் தனியார் மருத்துவமனையின் உரிமையாளர், கார்த்தி சிதம்பரத்தின் நெருங்கிய நண்பர் என்று கூறப்படுகிறது.
இந்தப் பின்னணியில் சென்னை, திருச்சி ஆகிய நகரங்களில் 15 இடங்களில் கடந்த 1-ஆம் தேதி மத்திய வருமான வரித் துறை, மத்திய அமலாக்கத் துறை ஆகியவற்றின் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
டிசம்பர் 1-ம் தேதி நடந்த சோதனையின் ஒரு பகுதியாக சென்னை நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் கார்த்தி சிதம்பரம் அலுவலகத்துக்கு வருமான வரித்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர். ஆனால், அப்போது அந்த அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால், அந்த அலுவலகத்துக்கு அவர்கள் சீல் வைத்தனர். இந்நிலையில் அந்த அலுவலகத்துக்கு மத்திய அமலாக்கத்துறையினர், மத்திய வருமானவரித் துறையினர் புதன்கிழமை காலை 11 மணிக்கு மீண்டும் சோதனையிட சென்றனர். முன்னதாக தாங்கள் சோதனையிட வருவது குறித்து, கார்த்தி சிதம்பரத்துக்கு அவர்கள் தகவல் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து கார்த்தி சிதம்பரம் காலை 11.35 மணியளவில் தனது அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அரசு அதிகாரிகள், சீலை அகற்றி, அலுவலகத்தை திறந்தனர். சோதனையின்போது அங்கு கார்த்தி சிதம்பரத்தின் தாயார் நளினி சிதம்பரமும் இருந்தார். இச் சோதனையையொட்டி, அந்த அலுவலகத்துக்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. சோதனை பிற்பகல் 2.55 மணியளவில் முடிவடைந்தது.
இந்தச் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அதன் உண்மைத்தன்மையையும், விசாரணையின் தேவையைப் பொருத்தும் வழக்கில் சேர்த்துக் கொள்ளப்படும் எனவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறினர். இந்தச் சோதனையால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.