அர்ச்சகர் நியமன வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது: தொல்.திருமாவளவன்

சென்னை:

கோயில்களில் ஆகம விதிகளின்படிதான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவதற்கு வகை செய்து சட்டம் இயற்றப்பட்டது. அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓர் அமைப்பு வழக்குத் தொடுத்தது. அதில் உச்சநீதிமன்றம் தடையாணை பிறப்பித்திருந்தது. 7 ஆண்டுகளாக நடைபெற்ற அவ்வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆகம விதிகளின்படி செயல்படும் ஆலயங்களில் கடைபிடிக்கப்படும் வழக்கங்களுக்கேற்பத்தான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்றும், அப்படி நியமிப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது அல்ல என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை நீதிமன்றம் இரத்து செய்யவில்லை என்றாலும் அதைச் செயல்படுத்த முடியாத அளவுக்குத் தடைகளை உருவாக்கியுள்ளது. எனவே, இந்தத் தீர்ப்பின்படி அர்ச்சகர்களை அவ்வளவு எளிதாக தமிழக அரசால் நியமிக்க முடியாது.
ஒருவேளை நியமித்தாலும் அதை எதிர்த்து வழக்குத் தொடர்வது தவிர்க்க முடியாதது என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர். தீண்டாமையைக் குற்றமாக அறிவிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 17 இந்த வழக்குக்குப் பொருந்தாது என இந்தத் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
அதற்கான விளக்கம் எதையும் நீதிபதிகள் குறிப்பிடவில்லை. சாதிய அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது என்பதே அரசியலமைப்புச் சட்டம் உறுப்பு 17-ன் சாராம்சம். ஆகம விதிகளின்படி செயல்படும் ஆலயங்களில் ஏற்கனவே இருக்கும் நடைமுறைகளின்படிதான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்பது மறைமுகமாக சாதியையும் சாதி அடிப்படையிலான பாகுபாடுகளையும் ஏற்றுக்கொள்வதே ஆகும். எனவே, இந்தத் தீர்ப்பு அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்பதில் ஐயமில்லை.
சுதந்திரமடைந்து 68 ஆண்டுகள் ஆனபிறகும்கூட இன்னும் சமூக சமத்துவத்தை நாம் எட்ட முடியாமல் இருப்பதற்கு மரபின் பெயரிலான இத்தகைய நடைமுறைகளே காரணம். அதை நீதிமன்றம் ஞாயப்படுத்தியிருப்பது வியப்பும் வேதனையும் அளிக்கிறது. நீதித் துறையில் சமூக நீதி நிலைநாட்டப்படாத காரணத்தினாலேதான் சமூக சமத்துவத்துக்கு முரணான இத்தகைய தீர்ப்புகள் வெளிவருகின்றனவோ என்ற ஐயத்தை இந்தத் தீர்ப்பு வலுப்படுத்தியிருக்கிறது.
தற்போது, உச்ச நீதிமன்றத்தில் தாழ்த்தப்பட்டட, பழங்குடியின வகுப்புகளைச் சேர்ந்த நீதிபதி ஒருவர்கூட இல்லை. பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருவர் மட்டுமே உள்ளனர். ஒரே ஒரு பெண் நீதிபதிதான் இருக்கிறார். உயர் நீதிமன்றங்களிலும் இதேபோலத்தான் சமூகநீதி எட்டப்படாத நிலை உள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் 4 நீதிபதி பதவிகளும், உயர் நீதிமன்றங்களில் 400 நீதிபதி பதவிகளும் தற்போது காலியாக இருக்கின்றன. அவற்றை நிரப்பும்போது சமூகநீதியின் அடிப்படையில் உரிய பிரதிநிதித் துவத்தை வழங்குவதற்கு உச்சநீதிமன்றம் முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
இந்தியாவுக்கே முன்னோடியாக, தமிழகத்தில் இயற்றப்பட்ட இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் தற்போது வழங்கப்பட்ட தீர்ப்பை திருத்தியமைக்கவும் தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம். – என்று கூறியுள்ளார்.