வெள்ள நிவாரணப் பணியில் மத்திய, மாநில அரசுகளுக்கிடையே போதிய ஒருங்கிணைப்பு: தமிழக அரசு

சென்னை:
வெள்ள நிவாரணப் பணியில் மத்திய, மாநில அரசுகளுக்கிடையே போதிய ஒருங்கிணைப்பு உள்ளது என தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் அளிக்கப்பட்டது.
வெள்ள நிவாரணம் தொடர்பாக, வழக்குரைஞர் ஏ.பி.சூரியப்பிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி புஷ்பா சத்ய நாராயணா ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி ஆஜராகி, வெள்ள நிவாரணப் பணியில் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே போதிய ஒருங்கிணைப்பு உள்ளது என்று தகவல் அளித்தார்.
அதற்கு நீதிபதிகள், வெள்ள நிவாரணத்துக்காக பெறப்படும் நிதியை பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக மட்டும் பயன்படுத்தப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும், இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவும் நபராக மூத்த வழக்குரைஞர் யசோத் வரதனை நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.