சென்னை: எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்காக அதிமுக.,வினர் விதிகளை மீறி வைத்துள்ள அனைத்து பேனர்களையும் அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் இன்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா நடக்கிறது. சட்டப் பேரவை சபாநாயகர் தனபால் தலைமையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிமுக., தலைவர்கள் என பலரும் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள்.
இந்த விழாவுக்காக சென்னை முழுக்க பேனர் வைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக பாதசாரிகள் நடக்கும் நடைபாதைகளிலும் பேனர் வைக்கப் பட்டுள்ளது. சென்னையில் விதியை மீறி இதுபோல் பேனர் வைக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தாவிட்டுள்ள நிலையில் இவ்விதம் விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளதற்காக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது பதில் அளித்த தமிழக அரசு 120க்கும் அதிகமான முறைகேடான பேனர்களை அகற்றிவிட்டோம். வேறு எங்கும் விதிமுறையை மீறி பேனர் வைக்கவில்லை என்று கூறியுள்ளது.
இதற்கு பதிலளித்த டிராபிக் ராமசாமி தரப்பு, அரசுத் தரப்பே முறைகேடாக பேனர் வைத்ததை ஒப்புக்கொண்டுள்ளது. எனவே அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் நிறைய பேனர்கள் அகற்றப்படாமல் உள்ளது. அதையும் நீக்க வேண்டும் என்று கூறியது.
இதை அடுத்து, விதியை மீறி முறைகேடாக வைக்கப்பட்ட அனைத்து பேனர்களையும் அகற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.




