மீண்டும் தி.மு.க.வில் டாக்டர் சரவணன்: ம.தி.மு.க.,வில் இருந்து தாவல்

சென்னை:
மதிமுகவில் இருந்து விலகிய மாவட்ட செயலாளர்கள் திமுகவில் இணைந்து வரும் நிலையில் டாக்டர் சரவணன் மீண்டும் திமுகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதிமுக புறநகர் மாவட்ட செயலாளராக பதவி வகித்தவர் டாக்டர் சரவணன். அதற்கு முன்பு திமுகவில் இருந்தார். பின்னர் அந்தக் கட்சியில் இருந்து விலகி மதிமுகவில் இணைந்தார். மதிமுகவின் கொள்கை கோட்பாடுகளை கற்று புரிந்துகொள்வதற்குள் அண்மையில் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
பாஜகவில் சிறிது காலம் பணியாற்றி வந்த சரவணன், தற்போது பாஜகவில் இருந்து விலகி திமுகவில் அக்கட்சி தலைவர் கருணாநிதி முன்னிலையில் தனது ஆதரவாளர்களுன் நேற்று இணைந்தார்.
இந்நிகழ்வில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர். சேலம், கரூர், மதுரை புறநகர், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட செயலாளர்கள் மதிமுகவில் இருந்து கூண்டோடு விலகி திமுகவில் இணைந்துள்ளனர். தொடர்ந்து மதிமுக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் திமுகவில் இணைந்து வருகின்றனர். பெரும்பாலானவர்கள் திமுகவில் தங்களை இணைத்து கொண்டு கட்சி பணியாற்றி வருகின்றனர். சட்டசபை தேர்தலில் திமுக உடன் கூட்டணி என்று கூறிவிட்டு திடீரென கம்யூனிஸ்டுகளுடன் இணைந்து மக்கள் நலக் கூட்டணியை வைகோ உருவாக்கியதுதான் இதற்குக் காரணம் என பெரும்பாலானோர் கூறி வருகின்றனர்.