spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇலக்கியம்சென்னை புத்தகக் கண்காட்சி; சில சிந்தனைகள்!

சென்னை புத்தகக் கண்காட்சி; சில சிந்தனைகள்!

- Advertisement -
bookfair

ஒவ்வொரு ஆண்டு புத்தகக் கண்காட்சிதோறும் வழக்கமாக சில விஷயங்கள் நடக்கும். சில பதிப்பாளர்கள் தமது புத்தகங்கள் அமோகமாக விற்றதாகச் சொல்வார்கள். சிலர் நேர்மாறாகச் சொல்வார்கள்.

கோலப் புத்தகங்கள், சமையல், சுய முன்னேற்றம், டயட், உடல் பயிற்சி, மருத்துவம், ஆன்மிகம் இவையே அதிகம் விற்பனை யாவதாகச் சொல்வார்கள். ஒவ்வொரு அரசியல் இயக்கமும் தத்தமது கொள்கைகளைப் பரப்ப புத்தகங்களை அச்சிட்டுத் தள்ளுவார்கள். புத்தகம் விற்று வரும் பணத்தில் அந்த பதிப்பகம் நடப்பதில்லை என்பதால் விற்பனையே ஆகாவிட்டாலும் ஆண்டுதோறும் அச்சிடப்படும் புத்தகங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டேதான் போகும்.

வாங்கிச் சென்ற புத்தகங்களில் 50% முழுவதுமாகப் படிக்கப்பட்டால் அதிசயம். முன்பு வாங்கியவற்றைப் படித்து முடித்திருக்காத நிலையிலும் புதிதாக வாங்கிக் குவிப்பதில் எந்தக் குறையும் இருக்காது. போட்டுக்கொள்வது நாலைந்துதான் என்றாலும் பீரோ முழுக்க வாங்கி அடுக்குவதில்லையா என்ன? அதோடு புத்தகங்களை முழுவதுமாகப் படித்தால் அடுத்தமுறை வாங்குவது கணிசமாகக் குறையும் என்ற அளவிலேயே பல புத்தகங்கள் எழுதப்படுவதால் அப்படிப் படிக்காமல் இருப்பதே பதிப்புலகுக்குப் பெரும் நன்மை பயப்பதாகவே இருந்தும்வருகிறது.

இவை எல்லாவற்றையும்விட ராயல்ட்டியே கிடைக்காவிட்டாலும் அல்லது தனக்கு மட்டும் கிடைத்தால் போதும் என்ற அற/கலக உணர்வுடனும் சற்றும் மனம் தளராமல் புத்தகங்களை எழுதித் தள்ளியும் இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு வருகை தந்து கை வலிக்கக் கையெழுத்திட்டும் பேராதரவும் பெருமகிழ்ச்சியும் அடையும் எழுத்தாளத் திலகங்கள் ஒருபக்கம்.

புத்தகப் பரிந்துரைகள் என்ற பெயரில் பெரிதும் நமக்கு நாமே திட்டமே வெகுஜோராக முன்னெடுக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் காட்சி ஊடகம் பக்கம் 100 புதிய பார்வையாளர்கள் நகர்வார்கள் என்றால் எழுத்து நோக்கி ஐந்து அல்லது பத்து பேர் வந்தால் அதிகம். இது எப்போதும் இருக்கும் விஷயம் தான்.

இப்போது நம் முன் இருக்கும் கேள்விகள் ஆண்டுக்கு ஆயிரம் புத்தகங்கள் விற்கும் பெஸ்ட் செல்லர்களை ஆண்டுக்கு ஐயாயிரம் என்று விற்க வைப்பது எப்படி? புத்தகங்களின் உள்ளடக்கம் சார்ந்து தரத்தை மேம்படுத்துவது எப்படி? எழுத்தாளர்களுக்கு உரிய ராயல்ட்டி கிடைக்கச் செய்வது எப்படி? வாங்கிச் சென்ற புத்தகங்களைப் படிக்க வைப்பது எப்படி?

புத்தக வாசிப்பு ஒரு பெரும் இயக்கமாக, பழக்கமாக ஆகவேண்டுமென்றால் பள்ளி, கல்லூரிகளில் அதற்கான முயற்சிகளைச் செய்தாக வேண்டியிருக்கும். கணிதம், அறிவியல், வரலாறு போன்ற பாடங்கள் இருப்பதுபோல் நூலக வகுப்பும் தனி முக்கியத்துடன் இருக்கவேண்டும். அதற்கென்று தேர்வுகள் இருக்கவேண்டும். அந்த மதிப்பெண்களும் ஒரு மாணவருடைய பத்தாம் வகுப்பு 12-ம் வகுப்பு சான்றிதழ்களில் இடம்பெற வேண்டும்.

தேர்வு மதிப்பெண் என்பதெல்லாம் கலை, இலக்கிய ரசனைக்கு எதிரான செயல்கள்தான். என்றாலும் ஏதோவொருவகையில் வாசிப்புக்கு முக்கியத்துவம் தரவைக்க அப்படியான ஒன்று தேவையாகவும் இருக்கிறது. தேர்வு என்பதை வெறும் மனப்பாடம் என்பதாக அல்லாமல் இலக்கிய அறிவு வெளிப்படும்வகையில் வைக்கலாம்.

ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் நூலகம் இருக்கவேண்டும். பள்ளியிலேயே நூலகப் படிப்பு ஒரு பாடமாக இருக்குமென்றால் வீட்டிலும் தினமும் அரை மணிநேரம் புத்தக வாசிப்புக்கும் இடம் தரவேண்டிய நிலையும் ஏற்பட்டுவிடும்.

டிஜிட்டல் பரிவர்த்தனையில் நாம் செலுத்தும் பணத்தில் வரி என்று எப்படி முறையாகச் சென்று சேர வழி இருக்கிறதோ அதுபோல் ஒரு புத்தகம் விற்பனையானதும் எழுத்தாளரின் கணக்கில் ராயல்டி சென்று சேர்வதுபோல் ஒரு ஏற்பாடு செய்யவேண்டும்.

பிரபல எழுத்தாளர்கள் தாமே பதிப்பாளராக ஆவது, தனக்கான ராயல்ட்டியை மட்டும் சாம, தான, பேத, தண்ட வழிகளைப் பயன்படுத்திப் பெற்றுக்கொள்வது என்பதோடு நின்றுவிடாமல் பதிப்பாளர்களிடம் இது தொடர்பாக கொஞ்சம் தைரியமாகப் பேசவேண்டும். ஒரு பதிப்பகம் அது வெளியிடும் அனைத்து எழுத்தாளர்களுக்கும் உரிய ராயல்ட்டியைக் கொடுக்க எழுத்தாளர்களின் பிரதிநிதியாக முன்னால் நின்று குரல் கொடுக்கவேண்டும். என் புத்தகத்தை வெளியிடும் பதிப்பகம் அனைத்து எழுத்தாளருக்கும் ராயல்ட்டியைக் கொடுத்துவிடும் என்று கம்பீரமாகப் பேச முடியவேண்டும்.

ஒரு குறிப்பிட்ட கொள்கை சார்ந்து இயங்கும் பதிப்பகங்கள் கூடிக் கலந்து பேசி புத்தகத்தின் கலை/தரத்துக்கு கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். அகல உழுவதைக் காட்டிலும் ஆழ உழுவதே மேல். ஒரு குறிப்பிட்ட கருத்தியல் சார்ந்து பத்து சுமாரான புத்தங்கள் வருவதைவிட காத்திரமான ஒரே புத்தகம் வருவது நல்லது. செலவு, நேரம், பிற உழைப்பு அனைத்தையுமே முறையாகச் செலவிடவேண்டும்.

எழுத்தாளர்கள் ஒரு புத்தகம் எழுதுவதற்கு முன் பத்து புத்தகங்களைப் படித்து அந்தத் துறை சார்ந்து தம்மைத் தகுதிப்படுத்திக்கொண்டாகவேண்டும். தேவையான நேரங்களில் களப்பணி, பிற மொழிப் பயிற்சி எல்லாம் பெற்று செய்வனத் திருந்தச் செய்யவேண்டும்.

பிராண்ட் பில்டிங் என்பது முக்கியமான விஷயம். பெரும் பதிப்பகங்கள் ஏதேனும் ஒரு எழுத்தாளர் தானாக குட்டிக்கர்ணம் போட்டு மேலே வந்ததும் அல்லது ஏதேனும் சிறு பதிப்பாளர் ஒரு எழுத்தாளரைக் கண்டுபிடித்து கவனத்துக்குக் கொண்டு வந்ததும் பாய்ந்து சென்று அவர்களை வளைத்துப் போடுவதில் காட்டும் சாதுரியத்தை ஒரு திறமையான எழுத்தாளாரை/பிராண்டை உருவாக்குவதிலும் காட்டவேண்டும்.

ஒவ்வொரு பதிப்பகமும் தாம் வெளியிட்ட புத்தகங்களில் மிகச் சிறந்த ஐம்பது அல்லது 100 புத்தகங்களின் பின் அட்டைக் குறிப்பை தொகுத்து சிறிய வெளியீடாகக் கொடுக்கலாம். முன் அட்டையுடன் வண்ணத்தில் பி.டி.எஃப் கோப்பாக வெளியிடலாம். ஒத்த கருத்துள்ள பதிப்பகங்கள் அல்லது குறிப்பிட்ட கருத்தியல் சார்ந்த பதிப்பகங்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரே தொகுப்பாக வெளியிடலாம்.

திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் எல்லாம் சிறுகதை, நாவல், கவிதை, அபுனைவு எழுத்தாளர்களைத் தமது திரைக்கதை-வசன குழுவில் கட்டாயம் வெளிப்படையாக இடம்பெறச் செய்யவேண்டும். இது காட்சி ஊடகத்துக்கும் நல்லது. எழுத்தாளர்களுக்கும் நல்லது.

  • எழுத்தாளர் பி.ஆர்.மகாதேவன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe