ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் முறையை நீக்க ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை:
ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் முறையை நீக்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் அரசு கடைபிடித்து வரும் அணுகுமுறை சமூக நீதிக்கு எதிராக இருப்பதுடன், ஆசிரியர் கல்வி படித்தோரின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி உள்ளது. வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அரசே வாய்ப்புகளை பறிப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் தான் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். அது தான் சிறந்த நடைமுறையாகும். இந்த முறையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் சிறந்த தலைமுறையை உருவாக்கினர். 2011-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு தகுதித் தேர்வும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு போட்டித் தேர்வும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தகுதித் தேர்வில் வெற்றி பெற 60% மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று அரசு நிபந்தனை விதித்திருந்ததால், 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் தகுதித் தேர்வில் பங்கேற்ற 7 லட்சம் பேரில் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவானோர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். மற்ற மாநிலங்களில் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு குறைவான தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் தகுதி மதிப்பெண்களை குறைக்க வேண்டும் என்று பல தரப்பினரும் வலியுறுத்தினர். அதன் பயனாக தகுதி மதிப்பெண்களை 55% ஆக குறைத்த தமிழகஅரசு, நியமன நடைமுறையிலும் மாற்றம் செய்தது.
அதுவரை தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை அவர்களின் மதிப்பெண் அடிப்படையில் நியமிப்பது தான் நடைமுறையாக இருந்தது. ஆனால், தகுதிகாண்(Weightage) மதிப்பெண் என்ற புதிய முறையை தமிழக அரசு அறிமுகம் செய்தது. அதன்படி தகுதித் தேர்வு மதிப்பெண்ணில் 60% மட்டும் எடுத்துக் கொள்ளப்படும். அத்துடன் பட்டப்படிப்பு, ஆசிரியர் கல்விப் படிப்பு ஆகியவற்றில் எடுத்த மதிப்பெண்களில் தலா 15%, 12 ஆம் வகுப்புத் தேர்வில் எடுத்த மதிப்பெண்களில் 10% சேர்த்து தரவரிசை தயாரிக்கப்படும் என்றும் அந்த வரிசைப்படி தான் ஆசிரியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் 2013 ஆம் ஆண்டில் தமிழக அரசு புதிய ஆணை பிறப்பித்தது. இந்த ஆணை தான் லட்சக்கணக்கானோரின் ஆசிரியர் பணி கனவை அடியோடு கலைத்திருக்கிறது.
தகுதித் தேர்வில் கிடைக்கும் மதிப்பெண் என்பது அனைவருக்கும் பொதுவானது. தகுதித் தேர்வில் பங்கேற்கும் அனைவருக்கும் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்பட்டு ஒரே மாதிரியாக மதிப்பீடு செய்யப்படுகிறது. ஆனால், தகுதிகாண் மதிப்பெண் அப்படிப்பட்டதில்லை. 12 ஆம் வகுப்பு தேர்வுகள் மற்றும் பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகளில் மதிப்பீடு செய்யும் முறை கடந்த 10 முதல் 15 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் மாற்றம் கண்டிருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன் விடையில் ஒவ்வொரு எழுத்தாக பார்த்து தான் மதிப்பீடு செய்யப்படும். இதனால் அப்போது 80% மதிப்பெண்கள் எடுப்பதே பெருஞ்சாதனையாக இருந்தது. ஆனால், இப்போது 100% மதிப்பெண் எடுப்பதென்பது சர்வசாதாரணமாக மாறி விட்டது. இதனால் கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த ஆசிரியர்கள் நியமனத்தின் போது தகுதித் தேர்வில் 150க்கு 85 மதிப்பெண் எடுத்த பலருக்கு அவர்கள் 12 ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பில் அதிக மதிப்பெண் எடுத்திருந்ததால் எளிதாக வேலை கிடைத்து விட்டது. அதேநேரத்தில் தகுதித் தேர்வில் 120 மதிப்பெண் எடுத்த பலருக்கு, பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளில் எடுத்த மதிப்பெண் குறைவாக இருப்பதால் ஆசிரியர் பணி கிடைக்கவில்லை. இவ்வாறு பாதிக்கப்பட்ட பட்டதாரிகளில் பெரும்பான்மையானோர் 10&15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் பட்டப்படிப்பை முடித்தவர்கள் ஆவர்.
தமிழ்நாட்டில் கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி 84.84 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு வேலைக்காக காத்திருக்கிறார்கள். இவர்களில் 3.97 லட்சம் பேர் தகுதிகாண் மதிப்பெண் வரம்புக்குள் வரக்கூடிய பட்டதாரி ஆசிரியர்கள் ஆவர். இவர்களில் பெரும்பாலானோர் 15 ஆண்டுகளுக்கு முன்பே பட்டம் பெற்றவர்கள். ஏற்கனவே 40 வயதைக் கடந்து நிரந்தர வேலையில்லாமல் தவிக்கும் இவர்களால் தகுதிகாண் மதிப்பெண் முறை இருக்கும் வரை ஆசிரியர்கள் ஆக முடியாது.
இதற்கெல்லாம் மேலாக தகுதிகாண் மதிப்பெண் என்பது இயற்கை நீதிக்கும், சமூக நீதிக்கும் எதிரானது ஆகும். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த முறை கடைபிடிக்கப்படவில்லை. தகுதிகாண் மதிப்பெண் முறை காரணமாக தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற சுமார் 75,000 பட்டதாரி ஆசிரியர்கள் வேலை கிடைக்காமல் தவிக்கின்றனர். எனவே, சமூக நீதியை காக்கும் வகையில் தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்து காலியாக இருக்கும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தையும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளைக் கொண்டு அரசு நிரப்ப வேண்டும்.

Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.