ஏர்வாடியில் கொல்லப்பட்டவர் குடும்பத்துக்கு நிதியுதவி: முதல்வரின் பாரபட்ச செயல்பாட்டுக்கு இந்துமுன்னணி கண்டனம்

சென்னை:

தனிப்பட்ட விரோதத்தில் ஏர்வாடியில் கொல்லப்பட்டவரின் குடும்பத்துக்கு நிதியுதவி அளிக்கும் தமிழக முதல்வரின் பாரபட்சமான செயல்பாட்டை கண்டிப்பதாக இந்துமுன்னணி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வரின் பாரபட்ச செயல்பாட்டை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது என்று இன்று வெளியிடப்பட்ட அறிக்கை:

சமீபத்தில், ஏர்வாடியில் காஜாமைதீன் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் அவர்கள் இறந்த காஜாமைதீன் குடும்பத்திற்கு பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய் கொடுப்பதாக அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் இதுவரையில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் அட்வகேட் ராஜகோபால் முதல் பாடி சுரேஷ் வரை நூற்றுக்கணக்கான இந்துக்கள் பயங்கராவதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு கொல்லப்பட்ட குடும்பங்களுக்கு தமிழக அரசு எந்தவிதமான ஆறுதலும் சொல்லவில்லை, குடும்பத்திற்கு நிதி உதவியும் செய்ய முன்வரவில்லை. பாடி சுரேஷ்க்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களுடைய எதிர்காலம் கேள்விக் குறியாக இருந்தபோதும் அரசாங்கம் எந்தவிதமான உதவியும் செய்ய முன்வரவில்லை. பெங்களூரில் வெடிகுண்டில் பலியான சென்னை கஸ்தூரி என்ற பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறவதற்குக் கூட தமிழக அரசு பிரதிநிதிகள் வரவில்லை.
ஆனால், கர்நாடாகவில் ஆளும் காங்கிரஸ் அரசாங்கம் கொலையுண்ட தமிழ்ப் பெண்ணின் உடல் சென்னை வர நேரில் வந்து உதவி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயத்தில் பல்வேறேு காரணங்களாலும், முஸ்லீம் இயக்கத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னையாலும் கொல்லப்பட்டவர்களுக்கும்கூட ஓடோடி சென்று தமிழக அரசு நிதி உதவி செய்கிறது. இராமநாதபுரம் காவல்நிலையத்தில் ஆய்வாளரைத் தாக்கியபோது தற்காப்புக்கு சுட்டதில் இறந்த செய்யது முகமது என்பவருக்கும், ஆம்பூரில் திருமணமான பெண்ணை கடத்திய வழக்கில் காவல்துறை விசாரணை செய்து அனுப்பி 20 நாட்கள் கழித்து இறந்த ஷமிலுக்கும் உதவி நிதி வழங்கினார் தமிழக முதல்வர் அவர்கள். ஆனால் இதுவரை காவல்துறை விசாரணையிலும், சிறையிலும் இறந்த இந்துக்களுக்கு எந்த நிதியும் தமிழக அரசு அளித்தது இல்லை.

இதுபோன்ற செயல் ஒருதலைபட்சமானதாகும். மதச்சார்பற்ற அரசாங்கம் முஸ்லீம்களைத் திருப்திப்படுத்த மட்டும் தொடர்ந்து நிதி உதவி அளித்து வருகிறது. இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டபோது அவர்களது குடும்பத்திற்கு எந்தவித உதவியும் செய்ய தயாராக இல்லை.

முசாபூர் கலவரத்தின் போது உத்திரபிரேதேச அரசு, முஸ்லீம்களுக்கு மட்டும் நிவாரணத்தை ஒருதலைபட்சமாக அறிவித்ததை அந்த மாநில உயர்நீதிமன்றம் தடை செய்ததுடன், மாநில அரசு நடுநிலையோடு செயல்பட வலியுறுத்தியதைச் சுட்டிக்காட்டுகிறோம்.

ஒரு நல்ல அரசாங்கத்தின் செயல்பாடா இது? என்பதை நடுநிலையான பொதுமக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 87% இந்துக்களின் வரிப்பணத்தை முஸ்லீம்களுக்கு மட்டும் கொடுப்பது எந்தவிதத்தில் நியாயம்? தமிழக ஜெயலலிதா அரசின் இந்த ஒருதலைப்பட்சமான, இந்து விரோதமான செயல்களை இந்துக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். முஸ்லீம் ஓட்டுக்காக பாரபட்சமாக செயல்படும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவிற்கு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தங்களது ஓட்டு சக்தியை பயன்படுத்தி மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.