தொழிலாளர் புதிய ஊதிய சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்: ஜி.கே.வாசன்

சென்னை:
தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய ஊதிய சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

”தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பது தொடர்பாக மத்திய அரசு முடிவெடுக்க உள்ளது. அனைத்து மாநிலங்களும் தொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச ஊதியத்தை அந்தந்த மாநில அரசே நிர்ணயித்துக் கொள்கிறது. தற்போது, மத்திய அரசு தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய சட்டத்தை கொண்டுவர உள்ளது.

இந்த ஊதியச் சட்ட திருத்தத்தில் மத்திய அரசு பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு குறிப்பாக தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் வேலை நேரம், பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு, மருத்துவம், விடுப்பு, இன்சூரன்ஸ், இஎஸ்ஐ போன்றவற்றை உறுதிப்படுத்திடும் வகையிலும், பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பணிநிரந்தரம், பணி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டும் இந்த புதிய ஊதியச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

தொழிலாளர்களின் உழைப்பின் மூலமே தொழில் வளர்ச்சி பெறும், தொழில்களும் பெருகும், நாடும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண முடியும். எனவே தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய ஊதிய சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்”