சரத்குமார் கட்சியில் இருந்து மாவட்டச் செயலர் அதிரடி நீக்கம்: கனிமொழியை சந்தித்தது காரணம்?

சென்னை:
சரத் குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து, அக்கட்சியின் மாவட்ட செயலாளர் உதயகுமார் நீக்கப்பட்டுள்ளார். இது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ.வின் உத்தரவுப்படி, தென்சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளராக இதுவரை செயல்பட்டு வந்த சி.உதயகுமார் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டு வருகிற காரணத்தினால் இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அவருடன் கட்சி தொடர்பாக எந்த ஒரு தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் – என்று கூறியுள்ளார்.

நடிகர் சரத்குமார் தலைமையிலான ச.ம.க.,வில், குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே நிர்வாகிகளாக உள்ளனர். இதனால், ‘அக்கட்சியில் சமத்துவம் இல்லை; ஜாதி ஆதிக்கம் உள்ளது’ என, குற்றச்சாட்டு எழுந்தது. இதை அடுத்து, கட்சி நிர்வாகத்தில் அனைத்து ஜாதியினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் குறிப்பிட்ட ஜாதியினர் இருந்த முக்கிய பதவிகளை, இதர ஜாதியினருக்கும் அளித்தார் சரத்குமார். இதனால், அந்த ஜாதியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளிடையே அதிருப்தி ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்தக் காரணத்தை முன்னிட்டு, கட்சியின் தென் சென்னை மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த சி.உதயகுமார் தலைமையில், அவரது ஆதரவாளர்கள், நேற்று முன்தினம், கனிமொழியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இத்தகவல் தெரிந்து, அவரை சரத்குமார் நீக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.