
ஓசூரை அடுத்த தேன்கனிக்கோட்டை தாலுகாவில் உள்ள உப்புரான்ப்பள்ளி என்ற இடத்தில் யானை தாக்கிய சம்பவத்தில் முதியவர் ஒருவர் மரணமடைந்தார். அவரைக் கொடூரமாகக் கொன்ற காட்டு யானை அந்தப் பகுதியில் சுற்றித் திரிவதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த தேன்கனிக்கோட்டை தாலுகா பாலதோட்டனப் பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் திம்மராயப்பா. நேற்று மேய்ச்சலுக்கு போன இவரின் மாடு வீடு திரும்பவில்லை என்பதால் அதனை தேடி இன்று அதிகாலை காட்டுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் அவர் உப்புராண்ப்பள்ளி என்ற இடத்தில் சோமசேகர் என்பவரின் புளியந்தோப்பில் பிணமாகக் கிடப்பதாக திம்மராயப்பாவின் உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது.
அவர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று இறந்து கிடக்கும் நபர் தங்களின் உறவினர் திம்மராயப்பா என்பதை உறுதி செய்துகொண்ட பின் போலீஸ் மற்றும் வன துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அங்கே சென்ற போலீசார் மற்றும் வனத்துறையினர் நடத்திய விசாரணையில் திம்மாயப்பா யானை தாக்கி உயிரிழந்தார் என்பது தெரிய வந்தது.
திம்மராய்பா உடலைக் கைப்பற்றிய போலீசார் அதனை பிரேதப் பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.