

கோவை உக்கடம் பகுதியில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் பலியானார்.
கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியிள் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த மாருதி காரில் திடீரென கேஸ் கசிவின் காரணமாக சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒருவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். தொடர்ந்து தகவலறிந்து அங்கு விரைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து ஏற்பட்ட பகுதியில் நான்கு புறமும் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு தடுப்பு வேலிகள் அமைத்துள்ள போலீசார் விபத்து குறித்த விசாரணை மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. கார், ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய போது சிலிண்டர் வெடித்ததாக கூறப்படுகிறது.
சிலிண்டர் வெடித்து கார் இரண்டாக உடைந்த சம்பவத்தையடுத்து சென்னையிலிருந்து கோவைக்கு டிஜிபி சைலேந்திரபாபு புறப்பட்டார். காரில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து பலியான நபர் யார் என்று இதுவரை கண்டறியப்படாத நிலையில் டிஜிபி விரைந்துள்ளார். இதனிடையே சிலிண்டர் வெடித்து கார் விபத்து ஏற்பட்ட இடத்தில் ஏடிஜிபி தாமரைக்கண்ணன் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், உக்கடம் ஈஸ்வரன்கோவில் பகுதியில் சிலிண்டர் வெடித்து கார் விபத்து தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறோம். கார் யாருடையது? இறந்தவர் யார்? என்பது குறித்து தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
காருக்குள் ஒரு சிலிண்டர் இருந்துள்ளது, வேறு ஏதேனும் பொருள் இருந்ததா என விசாரணைக்கு பிறகே தெரியும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் சிலிண்டர் வெடித்து கார் விபத்து நிகழ்ந்த இடத்தில் டிஜிபி சைலேந்திர பாபு நேரில் ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பிறகு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காரில் இருந்த 2 சிலிண்டர்களில் ஒன்று வெடித்துள்ளது.
பல்வேறு நிலைகளில் 6தனிப்படை போலீசார் அடங்கிய குழுக்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்குப் பிறகே பலியான நபர், யாருடைய கார் என்பது குறித்து குறித்து தெரிய வரும். புலன் விசாரணையில் ஏதேனும் கண்டறியப்பட்டால் என்.ஐ.ஏ. விசாரணைக்கு செல்லுமா என்பது குறித்து தெரியும் என்றார்.