மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள பள்ளியில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனது வாக்கினை செலுத்தினார். அவருடன் அவருடைய மனைவி காந்தி அழகிரியும் தனது வாக்கினை செலுத்தினார்.
மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு வெளியே வந்த மு.க.அழகிரி, செய்தியாளர்களிடம் பேசியபோது, இந்தத் தேர்தலில் என்னுடைய பங்களிப்பு நிச்சயம் இருக்கும் என்று சொல்லி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் திமுக.,வின் வாக்குகளை அவர் பிரிப்பார் என்றெல்லாம் அரசியல் நோக்கர்கள் பெரும் விவாதங்களைக் கிளப்பினர்.
அதன் பின்னரும் ஆதரவாளர்களுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ஸ்டாலின் முதல்வராக மாட்டார்… நிரந்தரமாக, வருங்கால முதல்வரே என்று அவர் போஸ்டர் அடித்து வைத்துக் கொள்ள வேண்டியதுதான். என்னுடைய ஆதரவாளர்கள் திமுக,வுக்கு எதிராக வேலை செய்வார்கள் என்றெல்லாம் கூறி பரபரப்பைக் கிளப்பினார்.
பின்னர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு வெளியே வந்த அழகிரியிடம் செய்தியாளர்கள், இந்தத் தேர்தலில் உங்களின் பங்களிப்பு இருக்கும் என்று சொன்னீர்களே… அது என்ன பங்களிப்பு என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த மு.க.அழகிரி, தேர்தலில் ஓட்டு போடுவது கூட பங்களிப்பு தான் என்று சாவகாசமாகச் சொல்லி கடந்து போனார்.
அவர் கூறிய படி, இன்று தனது மனைவி காந்தியுடன் வந்து, தேர்தலில் தனது பங்களிப்பைச் சிறப்பாகச் செய்து முடித்தார் மு.க.அழகிரி.