
இன்று தாக்கலான மத்திய பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டம் மதுரை மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்ற அறிவிப்பு கடந்த 2015-ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியானது. அதைத் தொடா்ந்து மதுரை தோப்பூரில் அதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டு, கடந்த 2019-ஆம் ஆண்டு பிரதமா் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது.கட்டிடங்கள் எழுப்பாமல் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் தற்காலிகமாக இயங்கி வருகிறது.மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்தோடு பிற மாநிலங்களில் அறிவித்த எய்ம்ஸ் முழுமையான செயல்வடிவம் பெற்று தற்போது இயங்கி வருகிறது.
ஆனால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கட்டுமானப் பணிகளுக்கு தேவையான நிதிகளை ஒதுக்குவதில் தாமதம் நீட்டித்து வருகின்றது.
இந்நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்ட 2023-24ஆண்டுக்கான பட்ஜெட்டிலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கான நிதி ஒதுக்கவில்லை.
இதனை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்பு தமிழக எம்.பி.க்கள் சு.வெங்கடேசன், கார்த்தி சிதம்பரம், மாணிக்கம் தாகூர், விஜய் வசந்த், பி.ஆர்.நடராஜன் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த போராட்டம் மதுரை மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.