பிரசித்தி பெற்ற பழனி தண்டாயுதபாணி கோயில் தைப்பூச விழாவில் 20லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில் இன்று பழனி முருகன் கோயிலுக்கு பாத யாத்திரை சென்று கொண்டிருந்தவர்கள் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதில் பெண் பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில் இந்த ஆண்டு தைப்பூச திருவிழாவில் திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் கடந்த பிப். 3, பிப் 7வரை நடந்தது. திருவிழாவின் நிறைவு நாளான நேற்று இரவு தெப்ப உற்சவம் நடந்தது.
இரவு 7 மணிக்கு தெப்ப தேர் உற்சவம் துவங்கியது. தெப்ப குளத்தின் நடுவில் வள்ளி தெய்வானை சமேதரராய் முத்துக்குமாரசாமிக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடாந்து மலர்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி தெப்பக்குளத்தை 3 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்றிரவு 11 மணிக்கு கொடி இறக்குதலுடன் விழா முடிவடைந்தது.

தைப்பூச திருவிழா முடிவடைந்ததை தொடர்ந்து இன்று முதல் மலைக்கோயிலில் தங்கரத புறப்பாடு மீண்டும் தொடங்கியது. கடந்த ஒருவாரத்தில் தைபூச திருவிழாவையொட்டி சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பழனியில் சாமி தரிசனம் செய்து சென்றுள்ளனர்.
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் அவ்வப்போது விபத்தில் சிக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலையில் பாதையாத்திரை வந்த பக்தர்கள் வையம்பட்டியில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது பேருந்து மோதியது. இதில் சிலர் காயமடைந்தனர். நூற்பாலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த பேருந்து மோதியதில் உமாராணி என்பவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
