
மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள, சிவ ஆலயங்களில் இம்மாதம் 15 ஆம் தேதி சனிக்கிழமை மாலை சனி மகா பிரதோஷ விழா நடைபெறுகிறது. மிகவும் விசேஷமானது .
இந்த பிரதோஷ காலத்தில், சிவபெருமான் மற்றும் நந்திகேஸ்வரனுக்கு அபிஷேகங்கள் செய்து மாலையில் அணிவித்து வழிபட்டால் சகல துன்பங்களும் நீங்கும் என்பது பக்தரின் நம்பிக்கையாகும். பொதுவாக, சிவாலயங்களில் பிரதோஷமானது சோமவார பிரதோஷம், சனி மகா பிரதோஷம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மதுரை அருகே உள்ள சோழவந்தான் விசாக நட்சத்திர கோயிலான பிரளயநாத சிவன் ஆலயத்தில், சனிக்கிழமை மாலை 4 மணி அளவில், சனி மகா பிரதோஷ விழா கொண்டாடப்படுகிறது .
இதை ஒட்டி, இக்கோயில் அமைந்துள்ள நரசிம்மர், சனீஸ்வரலிங்கம், நந்திகேஸ்வரன், சிவபெருமான் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படும்.
அதைத் தொடர்ந்து, சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் அலங்காரமாகி கோயில் பிரகாரங்களில் வலம் வரும்.
இதை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசிப்பர் .
இதை அடுத்து, சிறப்பு அர்ச்சனை வழிபாடுகளும், தீபாராதனை, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை, தொழில் அதிபர் எம்.வி. எம். மணி, கோயில் தக்கார் இளமதி, பள்ளி தாளாளரும் கவுன்சிலருமான டாக்டர் மருது பாண்டியன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
இதே போன்று, மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர், பழைய சொக்கநாதர், இன்மையில் நன்மை தருவார், தெப்பக்குளம் முத்தீஸ்வரன், அண்ணாநகர் சர்வேஸ்வர ஆலயம், மேலமடை சௌபாக்கி விநாயகர் ஆலயம், சித்தி விநாயகர் ஆலயம், திருமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ் ஆலயம், அவனியாபுரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் ஆகிய கோயில்களிலும் சனி மகா பிரதோஷ விழா மாலை நடைபெறும்.
இதை ஒட்டி, சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் ஆன்மீக குழுவினர் செய்து வருகின்றனர்.