
ஈரோடு செங்கோட்டை ரயில் பராமரிப்பு பணிகள் காரணமாக பகுதியாக ரத்து செய்யப்படுவதால் பயணிகளின் வசதிக்காக மதுரை-செங்கோட்டை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. சிறப்பு ரெயிலில் 10 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என மதுரை கோட்ட ரயில்வே அறிவித்துள்ளது.
மதுரை கோட்ட ரெயில்வேயில் நடக்கும் தண்டவாள பராமரிப்பு பணிகளுக்காக தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஈரோடு-செங்கோட்டை ரெயில் (வ.எண்.16845/16846) திண்டுக்கல்லுடன் நிறுத்தப்படுவதால், பயணிகளின் வசதிக்காக மதுரை-செங்கோட்டை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
அதன்படி, இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.06846) வருகிற 18-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை செங்கோட்டையில் இருந்து அதிகாலை 5.10 மணிக்கு புறப்பட்டு காலை 9.30 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.06845) வருகிற 17-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை மதுரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு செங்கோட்டை ரெயில் நிலையம் சென்றடைகிறது.
இந்த சிறப்பு ரெயிலில் 10 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரயில் எண் 16845 ஈரோடு – செங்கோட்டை எக்ஸ்பிரஸ், ஜூலை 22 தவிர, ஜூலை 17 முதல் 26 வரை திண்டுக்கல் – செங்கோட்டை இடையே பகுதியளவு ரத்து செய்யப்படும். இந்த ஒன்பது நாட்களிலும், ஈரோடு சந்திப்பு – திண்டுக்கல் சந்திப்பு இடையே மட்டுமே ரயில் இயங்கும். திண்டுக்கல் சந்திப்பு – செங்கோட்டை இடையே இயக்கப்படாது.
இதேபோல், செங்கோட்டையில் இருந்து காலை 5.10 மணிக்கு புறப்படும் ரயில் எண் 16846 செங்கோட்டை – ஈரோடு எக்ஸ்பிரஸ், ஜூலை 23 (ஒன்பது நாட்கள்) தவிர, ஜூலை 18 முதல் 27 வரை செங்கோட்டை – திண்டுக்கல் இடையே பகுதியளவு ரத்து செய்யப்படும். இந்த நாட்களில், செங்கோட்டை – திண்டுக்கல் சந்திப்பு இடையே ரயில் இயங்காது, ஆனால் திண்டுக்கல் சந்திப்பிலிருந்து ஈரோடு சந்திப்பு வரை இயக்கப்படும்





